கார்நாற்பது முன்னிறுத்தி ஆடூஉ மகடூஉ சிந்தனைகள்

சங்கம் மருவிய காலத்தில் எழுந்த நூல்களான பதினெண் மேற்கணக்கு நூல்களில் அகம் உரைப்பவை ஆறு. அவற்றுள் கி.பி இரண்டாம் நூற்றாண்டினராகக் கருப்படும் மதுரை கண்ணங்கூத்தனார் இயற்றிய கார் நாற்பது என்னும் நூல் முல்லத்திணையின் சிறப்பினை விளக்க எழுந்த நூலாகும். சங்க இலக்கியம் பத்துப்பாட்டில் முல்லைத்திணை மாண்பினை நப்பூதனார்  முல்லைப்பாட்டில்103 அடிகளில் தருவதைப் போன்று 40 பாடல்களில் 160 அடிகளைக் கொண்டு பல்வேறு நுட்பத்துடன் தம் கருத்தினைக் கண்ணங்கூத்தனார் எடுத்துரைக்கின்றார்.

முல்லைத்திணை ஒரு தலைவன் யாதானும் ஒரு காரணம் பற்றி வேற்றுப்புலம் செல்ல அவன் வருந்துணையும் தலைவி இல்லத்தில் காத்திருத்தல். அவன் கார்காலத்தில் திரும்பி வருவேன் என்ற சொன்ன சொல்லில் இருத்தல், கார்காலம் வந்தும் யாதானும் ஒரு காரணம் பற்றித் தலைவன் வருகை தாழ்த்தும்போது தலைவி ஆற்றாமை மீதூர்கின்றாள். தலைவியின் மனநிலை கண்ட தோழி அவளை வற்புறுத்தலும், தலைவி வைகலும் வரும் மாலைப் பொழுதினைக் கண்டு மனம் அழிதலும், தலைவன் திரும்பி வருதலுமாகப் பாடு பொருள் கோண்டு புலவர்கள் புனைந்துரைப்பது முல்லைத்திணை பாடல்களாகின்றன.

 முல்லை பெரும்பொழுதாய் அமையும் கார்காலப் பொழுது முல்லைக்குரிய சிறப்பான பருவமாகும். கார் பற்றிய வருணனை பாடல்களில் பாடல்களில் சிறந்து விளங்கும்இக்கார் பற்றிய செய்திகளை நாற்பது பாடல்களிலும் உள்ளடக்கியதாக அமைந்த இக்கார்நாற்பது பாடல்களில் தலைவன் கூற்றாய்  பதினொரு பாடல்களும்  தோழி கூற்றாய் 29 பாடல்களிம் அமைந்துள்ளன. இப்பாடல்களில் உள்ள கருத்துக்களைத் தொகுத்து பழந்தமிழகத்தில் பொருளீட்ட அல்லது வினைமேற் சென்ற அன்றைய ஆடவரின் மனம் எவ்வாறிருந்தது என்றும் கார்காலத்தில் திரும்பி வருவேன் என்றுரைத்த சொல்லுக்குக் கட்டுப்பட்டு இருந்த தலைவியின் மனநிலை எவ்வாறிருந்தது என்றும் பகுத்துக் காணுதற்கியலும். எனவே, கார்நாற்பது முன்னிறுத்தி தலைவனாகிய ஆடூஉ மனநிலையும் தலைவியாகிய மகடூஉ மனநிலையும் எடுத்துரைப்பது இவ்வாய்வுக் கட்டுரையின் மையப் பொருளாகின்றது.

தலைவன் கூற்றுப்பாடல்களில் ஆடூஉ சிந்தனை
தலைவன் கூற்றுப்பாடல்களாக அமைந்த பதினொரு பாடல்களில் வினைமுற்றிய தலைவன் தன்னெஞ்சிற்கு உரைத்தனவாக ( பா.24, 28, 29, 30) நான்கு பாடல்களும் வினைமுற்றி மீளுந் தலைவன் தேர்ப்பாகனுக்குச் சொல்லியனவாக (பா. 20, 21, 22, 31, 32, 33, 36) ஏழு பாடல்களும் காணப்படுகின்றன. செல்வத்தின் சிறப்பு கருதியும் அரசன் ஏவுதலின் பொருட்டும் பிரிந்து சென்ற தலைவனின் நிலை மிக நுட்பமாக இப்பதினொரு பாடல்களும் எடுத்துரைக்கின்றன.

நெஞ்சிற்குள் பெய்யும் மாமழை
வேற்றுப்புலத்தில் இருக்கும்  தலைவன் கானம் கவின்பெறும் காலமாகிய கார் காலத்தில் கருமுகில்கள் திசையெங்கும் பரவிக் கிடத்தலைக் காண்கின்றான். கார்காலத்தில் மழை பொழிதலால் காடுகள் கவின் பெறுதலையும் வண்டுகள் இசைத்தலையும் காண்கின்றான்(29). வானம் பெய்யும் மழைபூமியைத் துளிகளால் ஊடறுத்து இனிய மழை வீழ்ந்து நறுமணம் கமழ காற்றானது என்னிடம் தலைவியின் மடப்பத்தினைத் தெரிவிக்கும் என்பதைத் தன்னெஞ்சிற்கு கூறி ஆறுதல் அடைகின்றான். தலைவி வாரார் என்று வருந்தி இருக்கும் அறியாமை எண்ணித் தலைவன் புலம்பும் தலைவனின் உள்ளத்தில் கார்காலத்தில் நிலத்தில் இறங்கும்  மாமழை போன்று தலைவனின் உள்ளத்தில் தலைவி எண்ணம் மாமழையாய் இறங்குகிறது.

          கார்காலத்திற்குள் திரும்பி வருவேன் என்று கூறிய தலைவன் அவன் குறித்த பருவம் வந்த பின்பு தலைவியின் மனம் அடையும் வேதனை ஒரு பக்கம் வாட்டினாலும் மறுபுறம் தலைவியின் ஊரானது அலர் தூற்றும் ஊராக விளங்குவது குறித்த வருத்தம் மேலிட,
இமிழிசை வானம் முழங்கக் குமிழின்பம்
பொன்செய் குழையிற் இணர்தூங்கத் தண்பதம்
உடையதாய்க் கானம் விளங்குதலை எண்ணுகின்றான். உலை வாயை மூடினாலும் ஊர் வாயை முட இயலாது என்பதை நன்கு உணர்ந்தவனாகத் தனது வினை முடிந்தாலும் முடியாவிட்டாலும் போவதற்கு ஒருப்பட்ட உள்ளத்தனாய் இருப்பதைக் காண்கின்றோம்
பிறிதொரு பாடலில், புணர்வு நோக்கம் மிகுதியால் இல்லம் திரும்ப எண்ணும் தலைவன் மனநிலையினைக் குறிப்பால் உணர்த்துகின்றார் ஆசிரியர்,  
கல்லோங்கு கானம் களிற்றின் மதநாறும்
பல்லிருங் கூந்தல் பனிநோணாள் கார்வானம்
மெல்லவுந் தோன்றும் பெயல் (24:2-4)
என்னுமடிகளில் மழை பெய்தவுடன் தலைவி ஆற்றாள் என நெஞ்சினைத் தேற்றிக் கொண்டு, எல்லா வினையுங் கிடப்ப வெழுநெஞ்சே என்று தலைவன் திரும்ப எண்ணுவதாகப் பாடல் புனைவு அமைந்திருந்தாலும் களிற்றின் மதம் நாறும் கானம் என்பதில் அக்களிறு பிடியுடன் இசைத்து ஆடுவது புணர்ச்சி எண்ணத்தின் மிகுதியால் என்பதை  ஆசிரியர் குறிப்பாய்ப் பெற வைக்கின்றார். இவ்வடிகள் தலைவனின் புணர்வு வேட்கையைக் குறிப்பதாக அமையின் இழுக்காகாது. பழந்தமிழனின் இந்நிலை அயற்புலத்தில் வசிக்கும் இன்றைய தமிழனின்  வாழ்க்கைக்கு மிகவும் நெருங்கியதாக அமைவதைக் காண்கின்றோம்.

தேர்ப்பாகனுக்கு உரைத்தவை
கார்காலத்தில் செம்முல்லைகள் அரும்பு பதம் நோக்கியத் தலைவன் இல்லம் திரும்பும் நோக்கத்துடன் தேர்ப்பாகனிடத்துக் காதலி ஊரில் நமக்குச் சிறப்பான விருந்து காத்திருக்கிறது என்று கூறுகின்றான். மதர்த்த கண்களும் சின்மொழி பேசிடும் தலைவி என்று தன் காதலியின் இயல்பினை எண்ணி மகிழ்கின்றான். இவ்வடிகளில் தலைவி அதிகம் பேசாது கண்களால் பேசும் இயல்புடையவள் என்று குறிப்பிடப்படும்போது தலைவனின் திரும்பும் எண்ணத்திற்கான காரணம் அறிய இயலுகிறதுமேலும், மற்றொரு பாடலில் தலைவன் வினை முற்றலும் கார்காலத் தொடக்கமும் ஒருசேர நிகழ்கின்றன. போர்த்தொழிலும் முடிந்தன; தலைவியைக் காணும் நமது எண்ணம் நிறைவேறும்விதமாக கார்காலமும் வந்தது என்று தலைவன் தனது தேர்ப்பாகனிடத்து உவகையுடன் கூறுவதைக் காண்கின்றோம்.

தலைவனின் விருப்பத்தைத் தேர்ப்பாகன் நிறைவு செய்யும் விதமாகக் கார்காலத்துக்குரிய உடையினை அணிந்து குதிரையினைச் செலுத்தத் தயார் நிலையில் இருப்பதைப் பிறிதொரு பாடல் விளக்குகிறது(கார்.22). தலைவன் தேர்ப்பாகனிடம் விரைந்து செலுத்துவாயாக எனும்போது, ’கானம் கவின் பெற்றதற்குக் காரணியாய் அமைந்த இக்கார்காலத்தில் திரும்பி வருவதாக கூறினேன் அக்காலமும் வந்தது எனவே, தேரினை விரைந்து செலுத்து என்று கூறுவதாக மூன்று பாடல்கள் ( 31,32,33)  காணப்படுகின்றன. இவற்றுள்  
கடாஅவுக பாகதேர் காரோடக் கண்டே” (கார்.32: 1)
என்ற பாடல் வரி கார்காலம் வந்தது விரைந்து இல்லம் திரும்புக என்று குறிப்பாகவும்
கடனீர் முகந்த கமஞ்சூல் லெழிலி
குடமலை யாகத்துக் கொள்ளப் பிறைக்கும்
இடமென வாங்கே குறி செய்தேம்”             (கார்.33:1-3)
என்ற தலைவன் கூற்றுப் பாடலடிகள் அவன் செய்த குறியினை வெளிப்படுத்தியும்  நிற்கின்றன. மேலும், தலைவிக்குத் தலைவன் செய்த குறிகள் அனைத்தும் அவள் வாழும் நிலத்திற்கேற்ப அவள் அன்றாடம் காணும் நிலையில் கூறப்பட்டுள்ளது.

மழைக்காலத்தில் முல்லைநிலக் கருப்பொருள்களில் ஒன்றான எருமையின் செயல்களைத் தலைவனின் செய்கையோடு ஒப்பிட்டுத் தலைவி, தோழி கூறும்விதமாகச் சங்கப்புலவர் பாடல் யாத்துள்ளனர். இருவரின் ஆற்றாமையை உள்ளுறையாக வெளிப்படுத்த உதவும் ஒர் உத்தியாகப் புலவர்கள் இக்காட்சியைப் பயன்படுத்துவர். கண்ணங் கூத்தனார் இப்பாடலில் மாறுபட்டு அவ்வெருமையே  தலைவன் செய்த குறியாக அமைத்திருப்பது புனைவு நுட்பமாகும். வானம் பெய்த மழையால் மகிழ்ச்சியுற்ற எருமையானது பக்கத்திலுள்ள கரையில் நீர்நிலையினை அடைந்து நீந்துகிறது. அவ்வமயம், பூக்களொடு கொடிகள் அதன் கொம்பில் சிக்குகின்றன. அக்காட்சி பூச்சூடித் தருக்கித் திரியும் போர்வீரனை நினைவூட்டுகின்றதுஇக்காட்சியானதைக் காணும்போது நான் உன்னிடத்தே தோன்றுவேன் என்பது தலைவன் செய்த குறியாகக் குறிப்பிடுவர் ஆசிரியர். இதனை,
                   எருமை யெழிலே எறிபவர் சூடிச்
செருமிகு மள்ளரிற் செம்மாக்குஞ் செவ்வி (கார்.34:2-3)
என்ற அடிகள் உணர்த்தும். போர்வீரர்கள், வெட்சி, வஞ்சி சூடி தருக்கியிருத்தலைப் போன்று எருமை தன் கொம்புகளில் பூச்சூடித் தருக்கித் திரியும் என்றுரைப்பது எருமை பூச்சூடித் திரியும் காலமே நான் வெற்றிமாலை சூடி திரும்பும் காலம் என்று தலைவன்  கூறுவதாகப் பொருளுரைக்கலாம். இவ்வாறு கார்காலத்தில் திரும்பும் தலைவனின் மனமானது வழியிடையே தலைவியின் அழகினை எண்ணிச் செல்வதைப் பிறிதொரு பாடல் விளக்குகிறது

மழை பெய்தலால் கானம் கவின் பெறுகிறது. தலைவன் செல்லும் வழியில் முல்லை அரும்புகள் காட்சியளிக்கின்றன. இக்காட்சியினைக் கண்ட தலைவனுக்குத் தலைவியின் கூரிய பற்கள் கண்ணெதிரே வந்து நிற்கிறது. சின்மொழி பேசும் தலைவியின் மழைத்தடங் கண்ணும் பற்களும் என்னை வருத்துகிறது என்று தலைவன் தேர்ப்பாகனிடம் கூறுகின்றான். முல்லை பற்களுக்கு உவமையாதல்  தோழி கூற்றுப் பாடலிலும் காண்கிறோம் (கார்.14).


தோழி கூற்றுப் பாடல்களில் மகடூஉ சிந்தனை
தோழி கூற்றுப் பாடல்களாக இருபத்தொன்பது பாடல்களைத் தருகின்றார். பெண்பாலரான தலைவி, செவிலி கூற்றாகப் புலவர் பாடல் யாத்தாரில்லை. முல்லைத்திணைப் பாடல்களில்  காத்திருத்தல் என்னும் பொருண்மை குறித்து பாடல்கள் அமைந்து காணப்படுகின்றன. தலைவி ஆற்றாது புலம்பும் முல்லை பாடல்களைச் சங்க இலக்கியம் கூறுகின்றது. கார்காலத்தில் ஒரு பெண்ணின் மன ஏக்கத்தினைப் புலப்படுத்துவனவாக மழைக் காட்சிகள் அமைகின்றன.

சங்க இலக்கியத்தைப் தொடர்ந்து எழுந்த கார் நாற்பதில் தலைவி ஆற்றாது புலம்புவதும் கழிவிரக்கத்தால் வருந்தி உரைப்பதும் தோழி கூற்று வாயிலாகப் புலப்படுத்துவது உரிப்பொருள் மீறாத் தகைமையாகும். மேலும், அறவுணர்ச்சி ஓங்கியிருந்த காலத்தில் தலைவியின் தவிப்பினைப் புணர்வு விருப்பினை முல்லை பாடல்களாக அமைத்திடக் கூத்தனாருக்கு மனம் இடம் தரவில்லை என்ற அமைதி கூறவும் இடனுண்டு. ஒரு பெண்ணின் மனநிலையினை பெண்ணே அறிய இயலும் என்ற நாட்டார் மொழிக்கேற்பத் தலைவின் ஆற்றாமை கண்டு தன்னுள் புலம்பும் தோழியின் மனநிலை சித்திரிப்பினை நான்கு பாடல்களில் ( 3, 25, 34, 35) கூத்தனார் புனைகின்றார்.

தலைவன் கார்காலத்தில் திரும்பி வருவேன் என்று சொன்ன குறி இன்று வந்தது (கார்.3) பருவங்கண்டு  மனம் அழியும்  தலைவிக்கு உரிய மன ஆற்றலைப் பெறவேண்டும் என்று தோழியின் மனம் எண்ணுகிறது. தலைவிக்குரிய மருந்து தலைவன் என்பதைத் தோழி நன்கு உணர்ந்து இருந்தாலும் அவளின் நட்பு மனம்  பதறுகிறது. ஆற்றாமையால் பதறுகிறது.

 விரிதிரை வானம் வெறுப்பப் பருகி
பெருவிறல் வானம் பெருவரை சேருங்
கருவணி கானம்  -------     ----------     (கார்.34:1-3)
என்று குறிசெய்தார்  செய்தகுறி வந்தும் தலைவன் வரவில்லை எனும்போது தலைவியை நான் யாங்ஙனம் ஆற்றுவிப்பேன் என்பது தோழியின் புலம்பல் மொழியாகின்றது. இப்பாடலில் மழைச்சூல் கொள்ளும் காலம் என்று புலவர் கூறுவது தலைவிக்கும் பொருத்திக் காண்பதற்கு இடமளிக்கிறது.  கருவணி காலம் என்னும் தொடரால் இருவருக்கும் குழந்தைப்பேறு இல்லையென்பதைக் குறிப்பாய்க் கூர்ந்தறியலாம். மேலும், ’திருவணிந்த ஒண்ணுதல்எனும்போது தலைவி அணிந்திருந்த தலைக்கோலம் குறிக்கப்பெறுகிறது. இது, திருமணம் அன்றே தலைவன் பிரிந்து சென்றதைக் குறிக்கும் குறிப்பாய்க் கருத இடனுண்டு.

பிறிதொரு பாடலில்,  வானில் உள்ள மேகமானது தலைவியின் பசலையைப் போகுதற்கண்  வெற்றியை அறிவிக்கும் முரசினைப் போன்று மழையைத் தந்து நிற்கிறது என்று வருந்துகின்றாள்  இப்பாடலில் மழை இவளுக்காக இரங்கி நின்றது ஆனால், தலைவன் இரங்கினான் இல்லை எனும் நயத்தினைத் தந்து நின்றது. தலைவியின் பசலைக்கு மருந்தாய் வானம் இருந்தமை(கார். 40) மற்றுமொரு பாடலிலும் காண்கின்றோம்.

தலைவியை மறக்கும் பொருள் மோகம்
          செல்வம் உள்ளவர்கள் வாழ்க்கையில் இன்பம் அடைய முடியும்; புகழ் உள்ளவர்களாக வாழமுடியும். செல்வம் இருந்தால்தான் வறியோர்க்கு உதவி செய்ய முடியும் ஆகவே இல்ல்லறதில் வாழ்வோர் பொருளீட்டலை முதன்மையாகக் கொள்ள வேண்டும் என்ற ஆண்களின் மனப்பண்பு அக்காலப் பெண்களின் ஆற்றாமைக்குக் காரணியாய் அமைந்தது. தோழி கூற்றுப் பாடல்களில் பொருள் தேடிச்செல்லும்
புணர் தரு செல்வம் தருபாக்குச் சென்றார்(கார்.11)
என்ற ஆணின் உள்ளத்தினை எடுத்துரைக்கின்றது. இவ்வடிக்கு, இம்மை மறுமை இன்பங்கள் பொருந்துவதாகிய செல்வத்தைத் தேடிக் கொண்டுவரும் பொருட்டுப் பொருளீட்டச் சென்றார் என்று உரையாசிரியர் பொருள் தருகின்றார்(.13). பிறிதொரு பாடலில், தம்மின் புகழ் நிறுத்துவனவாக இப்பொருளீட்டல் அமையும் என்று எண்ணிச் சென்றதைக் குறிப்பிடும்.
நச்சியார்க்கு ஈதலும் நண்ணார்த் தெறுதலும்  (கார்.7)
என்னுமிரு காரணங்களுக்காக சென்றதாகவும் இப்பொருளீட்டலினால் அவன்
                   மண்ணியன் ஞாலத்து மன்னும் புகழ்வேண்டி(கார்.8)
சென்றதால் திரும்ப வருவான் என்று உறுதியோடு கூறுகின்றாள். உலக வாழ்வில் செல்வம் இல்லையெனில் வருவிருந்து இல்லை; கொடையில்லை இவ்விரண்டும் இல்லையெனில் புகழில்லை என்று கருதும் உள்ளத்தினனாய்த் தலைவன் விளங்கினான் என்பது இப்பாடல்களில் மூலம் விளக்கம் பெறுகிறதுசெல்வந்தர் பெறும் இன்பத்திற்கு,
கெடாஅப் புகழ் வேட்கைச் செல்வர் மனம்போல (32)
என்ற அடி எடுத்துக்காட்டாகும். இக்காலகட்டத்தில் எழுந்த நாலடியார், ’செல்வம் சகடக் கால்போற் வரும்என்பதால் கொடுத்து மகிழவும் என்றுரைப்பதும் வள்ளுவர், பொருட்பாலில் பொருள்செயல் வகை என்று பொருள்ளீட்டலின் நோக்கத்தினை தனியதிகாரமாகத் தெளிவுபடுத்துவதும் குறிக்கத்தக்கதுமேலும், அன்பு, தாய் என்றும் அருள் உள்ளம், குழந்தை என்றும் செல்வம், அது வளர்க்கும் செவிலித்தாய் என்றும் வள்ளுவர் குறிப்பர்(குறள்.757).

            பொருளீட்டச் செல்லும் தலைவன் புதுமழை பெய்த்ததும் உழுது பயிர் விளைவிக்கும் தனது தொழிலைச் செய்யவீடு திரும்புவான் என்பதைக் குறிப்பால் அறிகின்றோம். தலைவி ஆற்றுவிக்கத் தோழியானவள் அவன் செய்குறிகளைக் குறிப்பிடுவதோடு உழவர்கள் புதிதாக ஏர் உழுவிக்கத் தொடங்கும் செயலினைக் குறிக்கின்றாள். பண்டைய முல்லை நிலத்தில் விவசாயம் செய்யப்பட்டதற்குச் சங்க இலக்கிய முல்லைப் பாடல்கள் சான்று பகர்கின்றன.

தலைவியைத் தேற்றும் தோழி
கார்காலத்தினைக் கண்ட தலைவன் சென்ற இடத்தில் தாமதிக்காமல் விரைந்து உனைக் காண வருவான். அவன் சொன்ன பருவம் வந்தது அதுவே உன் பசலைக்குக் கார்காலமானது தலைவி மனம் ஆற்றாமைக்கு மருந்தாகும்  என்பாள் தோழி( கார்.8).
குறித்த பருவத்தில் வாராத தலைவனின் பொய்மையைக் தலைவியிடம் கடிந்து கொள்ளும் தோழி,
புகர்முகம் வேழம் பூழிப் புரள உயர்நிலைய
வெஞ்சின வேழம் பிடியோடு இயைந்தாடும்(கார்.38)
கானத்தில் விலங்கினங்களின் அன்பினைக் கண்டும் அன்பில்லாது பொருள் தேடும் அவனொடு நீ கொள்ளும் ஊடலால் யாது பயன் என்கிறாள்.

உவமை நயம்
உவமை கூறுமிடத்துப் பொதுவாக மயில் போன்று ஆடினாள் என்பது உவமையாக அமையும். ஆனால் கூத்தனார் பெண்களைப் போன்று மயில்கள் ஆடின என்று மாற்றி யோசிக்கின்றார்.  இதனை இலக்கணிகள் விபரீத உவமை அல்லது எதிர்நிலையணி என்பர். தொல்காப்பியர்,  
பொருளே உவமம் செய்தனர் மொழியினும்
மருளறு சிறப்பின்ஃ துவம மாகும் (பொருள். உவம.9)
என்று குறிப்பது இவ்வணியாகும். உவமையும் உவமிக்கப்படும் பொருளும் மாறி உரைக்கப்படும் அணி அலகினை ஈண்டு காண்கின்றோம். மேலும், வள்ளலிடம் பரிசு பெறக் கருதிய பாண் மகன் அவனிடத்துப் பாடுவது போல பிடவமலரில் உள்ள தேனினை விரும்பிய  வண்டு பாடுவதாகக் கூறும்(கார். பாடலில்  தற்குறிப்பேற்ற அணி மிகச் சிறப்பாக அமைந்து காணப்படுகிறது. மேலும்,
குருந்தின் குவியிண ருள்ளுறை யாகத்
திருந்தி னினிவண்டு பாட லிருந்தும்பி
இன்குழ லூதும் பொழுது (கார்.15)
என்ற பாடலடிகள் கார்காலத்தில் உயிரின்ங்களின் செயல்களை வெளிப்படுத்தவல்லன. இப்பாடல் கருத்தினைப் போன்று மணிமேகலையும்

குழலிசை தும்பி கொளுத்திக் காட்ட
மழலை வண்டினம் நல்லியாழ் செய்ய
மயிலா டாரங்கின் மந்திகாண் பனகாண்(மலர்வனம். பா.அடி.
என்று கூறுவது ஒப்பு நோக்கத்தக்கது.

இடியென்பது  அச்சுறுத்துவதாக இலக்கியங்களிலும் நடப்பியல்  வாழ்வியலும் நாம் உணர்ந்து வருகின்றோம். இலக்கியங்கள் இடியோசை கேட்ட நாகம் என்று உயிரின அச்சத்தினைப் புலப்படுத்துகிறது. கூத்தனார் ஒருவரே தமிழ் இலக்கியத்தில் மின்னலும் இடியும் காதலன் வரவை, காதலி நிலையினை  அறிவிக்கும் தூதுப் பொருளாய் அமைவதைக் காண்கின்றோம்.
கடிதிடி வானம் முரறு நெடுவிசை
சென்றாரை நீடன்மி னென்று(கார்.6)
என்ற அடிகளில் தலைவனைக் காலந் தாழ்த்தாது ஒழிமின் என்றுரைக்கும் இடியின் செயலும் வானமும் அவர் வருவார் என்பதை மின்னல் என்னும்  தூதால் அறிவிக்கும்(கார். 2) என்று கூறுவதும் நயத்தக்கச் சிந்தனையாகும்.

            பிறிதொரு பாடலில், மழைக்கு முன் காடுகளின் நிலையும் பின்னுள்ள நிலையினையும் வறுமையுற்றோன் மற்றும் செல்வம் படைத்தோன் ஆகியோருக்கு  உவமை கூறுவது சிறப்பானது. மழையில்லாத காடு வறுமையுற்றோன் உடம்பினைப் போல் வாடியிருந்தது மழைபெய்தபின் காடானது செல்வம் உடையோனின் உள்ளம் போல அழகு பெற்றது என்பர். மழையற்ற நிலத்தினை வறுமையுற்றோன் உடம்பிற்கு உவமை கூறியவர் அடுத்து மழையால் கவின் பெற்ற நிலத்திற்குச் செல்வம் உடையோன் உடம்பினை ஒப்புமையாகச் சுட்டாது அவன் தரும் கொடை உள்ளத்தினைக் குறிப்பது நயமான சிந்தனையாகின்றது.  தொல்காப்பியர்,
வினை பயன் மெய் உரு என்னும் நான்கே (தொல்.உவ.சூ.எண். 3)
என்று உவமையின் தோற்றுவாயினை எடுத்துரைப்பர். இவ்விதிக்கேற்ப, வினை, பயன், மெய், உரு ஆகிய நான்கு நிலைக்களன்களையும் இலகுவாகப் பயன்படுத்துகின்றார்.
உரு உவமையாகச் சிரல் வாய்க்கு  தளவமும்(செம்முல்லை), குழிழம் பூக்கள் பொன் தோட்டிற்கும், அஞ்சனம் காயாஞ்செடிப்  பூவிற்கும், தோன்றிக்கு நெருப்பும் உவமையாகின்றன.
 வடிவ உவமையாகத் தலைவியின்  கண்கள் கருவிளைப் பூவிற்கும் மாவடு தலைவி கண்களுக்கும், பாம்பின் தலை காந்தள் பூவிற்கும், நொச்சி அரும்பு ஞெண்டு கண்ணுக்கும், முல்லை அரும்புத்  தலைவி பற்களுக்கும் உவமையாகின்றன.
வளம் உடையார் செல்வம் காடு பூத்து நிற்றலுக்கும் காடுகள் தரும் அழகு மகளிரின் இளநலத்திற்கும்(கார்.22), அசோகந் தளிர், மகளிர் மேனிக்கும்  பயன் உவமையாகின்றன.
தொழிலுவமையாக அருவி ஒலியானது தேர் ஒலிக்கும் எருமை பூச்சூடிச் செல்லுதல் போர்வீரர் தருக்கிச் செல்லுதலுக்கும் மின்னல் ஒளியானது வாள் மின்னும் ஒளிக்கும் பாண்மகனின் பாட்டு வண்டின் முரலும் ஓசைக்கு உவமையாகின்றன.
பழக்க வழக்கங்கள்
இலக்கியம் காலம் காட்டும் கண்ணாடி என்பதற்கிணங்க நூலாசிரியர் தம் கால பழக்கவழக்கங்களைப் பதிவு செய்துள்ளார். அக்காலகட்டத்தில் வேள்வித்தீ வளர்த்தல் புகழுக்குரியதாக இருந்தமை,
புகழ் வேள்வித் தீப் போல மின்னும் மழை (31)
என்னுமடியால் விளக்கமுறுகிறது. மேலும், கி.பி இரண்டாம் நூற்றாண்டில் திருமால் வழிபாடுடன் பலதேவன் வழிபாடு இருந்தது என்பது, பொருகடல் வண்ணன்(கண்ணன்), நாஞ்சில் வலவன்(பலதேவன்) என்ற தொடர்களால் அறிய முடிகின்றது.
கார்காலத்தில் தோன்றிப் பூக்கள்  பூத்துக் குலுங்கும் காட்சியினை விளக்குவதற்கு, கார்த்திகைத் திருநாளில் நிரல் நிரலாக விளக்கேற்றி வைக்கும் பழந்தமிழர் மரபினைச் சுட்டுகின்றார்.
நலமிகு கார்த்திகை நாட்டவ ரிட்ட
தலைநாள் விளக்கின் நகையுடைய வாகிப்
புலமெலாம் பூத்தன தோன்றி (கார். 26)
என்ற பாடலடிகளில் குறிப்பிடப்படும்  தமிழர் மரபு சங்ககாலந் தொட்டுத் தற்காலம் வரையிலான இலக்கியங்களில் குறிப்பிடப்படுவது இத்திருநாளின் தொன்மையினை உணர்த்துவதாகும்.

தொகுப்புரை    

தலைவன் கூற்றுப் பாடல்களில் பொருளீட்டும் எண்ணத்தோடு சென்றிருந்தாலும் தலைவி குறித்த ஏக்கத்தினை வெளிப்படுத்துவதாக அமைகின்றன. தலைவியின் கண்களும் பற்களும் தலைவனின் எண்ணத்தினைக் கட்டிப்போடுவதாக இல்லம் விரைந்து திரும்புவதற்கான காரணியாகவும் அமைகின்றன.
தலைவன் திரும்பும் வழியிடைக்காட்சிகளால் புணர்வு ஏக்கம் மிகுதியாகின்றது. அது குறித்து குறிப்பாய்த் தேர்பாகனிட்த்து விரைந்து தேரினைச் செலுத்துமாறு கட்டளையிடுவதனாலும் அவனுக்கு விருந்து காத்திருக்கின்றது என்பதாலும் உணர்கின்றோம்.
தோழி கூற்றுப் பாடல்களில் தலைவனின் பொருளீட்டும் எண்ணமே தலையோங்கி நிற்பதாகக் குறிப்பிடப்படுகிறது. தலைவியின் ஆற்றாமை குறித்து வருந்தும் தோழி, தலைவிக்கு இக்கார்காலம் தலைவன் வருந்துணையும் இருத்தலுக்கான வலிமையினைத் தரவேண்டும் என்று எண்ணுகின்றாள். தலைவியின் மனவேதனையினை வெளிப்படுத்தி நிற்கின்றன.

திருமால், பலதேவன் வழிபாடு சங்கம் மருவிய காலத்தில் நிலவியதை இந்நூல் குறிப்பிடுகிறது. வேள்வித்தீ வளர்த்தல், கார்த்திகை தீபத் திருநாளில் நிரலாக விளக்கேற்றுதல் போன்ற சமயச் சடங்குகள் பற்றிய செய்திகள் அமைந்துள்ளன.

Comments