புறநானூற்றில்
கொடை
முனைவர் இரமேஷ் சாமியப்பா,
தமிழ் உதவிப்பேராசிரியர்,
அரசினர் கலைக்கல்லூரி(தன்.),
கும்பகோணம்.
தொல்காப்பியர் சேர,சோழ,பாண்டியர்
என்னும் மூவேந்தர்களைக் குறிப்பிடும் போது வண்புகழ் மூவர் என்னும் அடைபுணர்த்தி உரைப்பர்.(1)
மன்னர்கள் ஆட்சி வண்மையும் படை வண்மையும் உடையவர்களாக இருப்பது பொதுத்தன்மை; கொடையாளிகளாக
இருப்பது சிறப்புத்தன்மையாகும். தமிழக மன்னர்கள் பொதுவான வீரம்,புகழோடு சிறப்பான கொடைத்தன்மையுடன்
இருப்பதை வண்புகழ் மூவர் என்ற தொடர் நமக்கு இனிதுற விளக்குகிறது. வண்புகழ் என்னுந்
தொடரே பின்னர் வந்த இலக்கியங்களில் விரித்துரைக்கப் பெறுகிறது.
பதிற்றுப்பத்தின் பதிகமான உரைநடைப்பகுதிகள் சேரவேந்தனிடம்
ஒவ்வொரு புலவனும்
பத்துப்பாட்டுப் பாடியபின் பேற்ற பரிசில் யாது
என்பதனை இப்பகுதிகள்
எடுத்துரைக்கின்றன. இவை யாவும்
பெருங்கொடைகள்.
நிலையான வருவாய், ஆட்சியுரிமை,அமைச்சுப்
பதவி, அரசவைக்கவி,
அரசன் மகன் பணியாள், துறக்கச் செலவு
என்றெல்லாம்
அளிக்கப்பட்டுக் காலமாற்றத்தில் கற்பனையாகக்
காட்சி அளிக்கிறது.(2)
என்னும் அறிஞரின் கூற்றும் கொடைப்பண்பு பழந்தமிழரிடையே
உயர்ந்ததொரு விழுமியமாகப் போற்றப்பட்டு வந்துள்ளமையை எடுத்துரைக்கின்றது.
வாழ்வியல் விழுமியங்கள்
: விளக்கம்
மனிதனுடைய
நம்பிக்கைகள், எண்ணங்கள், கருத்துக்கள் ஆகியனவற்றின் அடிப்படையில் அமைவதே விழுமியங்களாகும்.மனிதனை
மேம்படுத்தும் பண்புகள் அனைத்தும் மனித விழுமியங்கள் ஆகும்.பிற உயிர்கள் மீது அன்பு,
சேவை செய்தல், நல்லொழுக்கம், நேர்மை, பிறர் நலம் பேணல், உண்மை பேசுதல், சடங்குகளை மதித்தல்,
சூழலை மாசடையாது காத்தல் போன்ற இன்னோரன்ன பண்புகளை மனிதன் புறந்தள்ளும்போது மனிதகுல
வீழ்ச்சிக்கு
அதுவே
காரணமாக அமைகின்றது.
வாழ்வியல் விழுமியங்களை தனிமனித விழுமியங்கள்
மற்றும் சமுதாய விழுமியங்கள் என்னும் இருபெரும் பிரிவாகக் காணுதற்கியலும். பிறருக்குத்
தீமை செய்யாது இருத்தல் என்னும் தனி மனித விழுமியம் பிறர் நலம் பேணும்போது சமுதாய விழுமியமாக
மலர்கின்றது. பிறர் நல்வாழ்வில் மகிழும்போது தாமும் மகிழ்தல் என்னும் ஒப்பற்ற விழுமியமாக
இறுதியில் நிறைவுறும். இம்மனித குலம் மேம்பாடு அடைய அடிப்படையாக அமைவது அவனது கூட்டுவாழ்க்கையாகும்.
இக்கூட்டு வாழ்க்கையில் மிக முக்கியப் பங்கினை வகிப்பது இருப்போர் இல்லோர்க்கு வழங்கும்
கொடை பற்றியதாகும். இக்கொடைப் பண்பானது புறநானூற்றில் இடம்பெற்றிருக்கும் பாங்கினை
விளக்க முயல்வது இக்கட்டுரையின் கருதுகோளாகின்றது.
கொடை: சொல்விளக்கம்.
கொடை என்பதற்குத் தியாகம், புறத்துறை, திருவிழா,
வசவு, அடி என்றும் ஈகைக்கு – கொடை, பொன், கற்பகம் என்றும் பொருள் தருகிறது சென்னை பல்கலைக்கழகத்
தமிழ்ப் பேரகராதி. (பக்-236 ). தமிழ் தமிழ் அகரமுதலி கொடை என்ற சொல்லுக்கு,
ஈகம்,தியாகம்,கொடை,கைக்கொண்ட அநிரையை இரவலர்க்கு
வரையாது கொடுக்கும் புறத்துறை, ஊர்த்தேவதைக்கு
மூன்று
நாள் செய்யும் திருவிழா, வசவு, அடி(ப.-
387)
எனப்
பொருளுரைக்கும். ஈகைக்கும் கொடைக்கும் உள்ள வேறுபாட்டினை அறிஞர் முத்துலக்குமி தனது
நூலுள் குறிப்பிடும்போது,
வறுமையுற்றார்க்கு அவர் வேண்டுவன
ஈதல்
ஈகை எனவும், தம்மை நாடி வரும் இரவலர்க்கும்,
பரிசிலர்க்கும் அவரைப் போற்றி வரையாது
கொடுத்தல்
கொடை எனவும் பெறும்(3)
என்பர்.
சங்க காலத்தில் இவ்விரண்டும் வேறுபாடின்றி போற்றப்படுவதைக் காணமுடிகின்றது.
கொடை: இலக்கணம்
செல்வத்துப்
பயனே ஈதல் என்பதைக் காலந்தோறும் இலக்கியங்கள் இயம்பி வந்துள்ளன. செல்வத்துப் பயனே கொடுத்தலாகும்
அவ்வாறின்றி யாமே அனைத்தும் நுகர்வோமென்று யாரும் இருந்துவிடமுடியாது என்பதை,
உண்பது நாழி உடுப்பவை இரண்டே
பிறவும் எல்லாம் ஒரொக் கும்மே
செல்வத்துப் பயனே ஈதல்
துய்ப்பேம் எனினே தப்புந பலவே
(189:6-9)
என்னும்
பாடலடிகள் இதனையுணர்த்தும். புரவலர்களும் இம்மைப் புகழ் இரப்போர்க்குக் கொடுப்பதாலும்,
மறுமைப் புகழ் பாடுவதாலும் கிடைக்கும் என்று நம்பினர். மன்னன் வஞ்சினம் உரைக்கும் போது,
புரப்போர் புன்கண் கூர
இரப்போர்க்கு ஈயா இன்மை யான் உறவே
(72:17-18)
என்று
கூறுவதும் இந்நோக்கினையுடயதாகும். என்னால் புரக்கப்படும் கேளிர் இரக்கும் அவர்களுக்குக்
கொடாத வறுமையை யான் அடைவேன் என்றுரைப்பதன் மூலம் மன்னர்களின் இம்மைப் புகழ் விரும்பியமை
பெறப்படுகிறது.
புறநானூற்றில் விழுமியங்கள்
ஈவோர்
இரப்போர் இலக்கணம், கொடுத்தலின் உயர்வு, வறுமையிலும் செம்மை, முகமறிந்து நல்கல், இரத்தல்
இழிவு முதலான பல விழுமியங்களை உள்ளாடக்கியதாக கொடை என்னும் விழுமியம் அமைகின்றது. புறநானூற்றில் காணப்படும்
விழுமியங்களை மன்னர்களின் விழுமியங்கள், புலவர்களின் விழுமியங்கள் மற்றும் போர்மறவரின்
விழுமியங்கள் என்னும் அடிப்படையில் பாகுபடுத்தற்கியலும்.
மன்னரின்
விழுமியங்கள்
சங்ககால மன்னர்கள், வள்ளல்கள் முதலானவர்களின் கொடைத்திறத்தினை
நோக்கின் கொடைஎன்னும் விழுமியம் மன்னர்கள், வள்ளல்களின் வாழ்வில் நீக்க இயலாத பண்பாக
அமைந்திருத்தலைக் காண்கின்றோம்.
தலைநாள்
விருப்பினன்
ஒருநாட் செல்லலம் பலநாட் செல்லலம்
பலநாள் பயின்று பலரோடு செல்லினும்
தலைநாட் போன்றே விருப்பினன் மாதோ
(101:1-3)
என்று
ஒளவையார், அதியனைக் குறித்துப் பாடும்போது மன்னனின் விருந்தோம்பல் பண்பினைக் காண்கின்றோம்.இது
போன்ற கருத்தினைக் காரிக்கிழாரும்,
இன்று செலினுந் தருமே சிறுவரை
நின்று செலினுந் தருமே
பின்னும்
முன்னே தந்தனன் என்னாது
உன்னி
வைகலும் செலினும் பொய்யலன்
ஆகி
யாம் வேண்டி யாங்குஎம்
வறுங்கல நிறைப்போன்(171:1-5)
என்று
பிட்டங்கொற்றனைக் குறித்துப் பாடுவர்.
கைம்மாறு கருதாக் கொடை
உலகத்துச்
செல்வர் பலரும் தம்பால் உள்ள செல்வத்தைப் பரிசிலர்க்கு வழங்குதல் இம்மையிற் புகழும்
மறுமையிற் துறக்க இன்பம் குறித்தது ஆகும். இல்லோர்க்கு வேண்டுவன நல்கி அவர்களையும்
தம்மால் உலகியலில் நுகர்வன எல்லாவற்றையும் நுகர்வித்தல் உடையோர்க்குக் கடனாகும் என்ற
உயர் விழுமியத்தைக் கடைபிடிப்பவன் ஆய்அண்டிரன் என்றுரைப்பர் முடமோசியார்.
இம்மை செய்தது மறுமைக்கு ஆமெனும்
அறவிலை வாணிகன் ஆய்அலன்
…………….’ (134:1-2)
என்னுமடிகள்
இதனை வலியுறுத்தும்.
பசிப்பிணி மருத்துவன்
கிள்ளிவளவன் யான் வாழும் நாளினையும் சேர்த்துப்
பண்ணன் வாழ்வானாக என்று பாடுவதற்கு, பண்ணன்
வருவோர் பசித்துன்பம் காப்பது காரணமாக அமைகின்றது. பசி என்னும் நோய் மிகக் கொடிது;
அது வறுமையில் உள்ளவரை மிகவும் துன்புறுத்தும். அப்பசித்துன்பத்தைக் களைபவனாகப் பண்ணன்
திகழ்கின்றான். ”அவன் மனையில் இடையறாது ஊன் உண்பார் ஒலி கேட்கின்றது. எறும்பின் வரிசை
போல இளஞ்சிறார்கள் சோறுடைக் கையராகச் சுற்றித் திரிகின்றனர்”. இதனைக் கண்ணுற்ற புலவர்
அவனது பரிசினைப் பெற்றுத் திரும்புவோரிடத்துப், “பசிப்பிணி மருத்துவன் இல்லம் அணித்தோ
சேய்த்தோ கூறுமின் எமக்கே” என்று வினவுவார். இதனால் மன்னனின் சமூகப் விழுமிய உணர்வினை
உணர்கின்றோம். பிறிதோரிடத்தில் ஈர்ந்தூர்கிழாரினை மதுரைக் குமரனார் பாடும்போது,
நிரப்பாது கொடுக்குஞ் செல்வமும் இலனே
இல்லென மறுக்குஞ் சிறுமையும்
இலனே
………………………………………………………………………………………………………………………
ஈர்ந்தை யோனே பாண்பசிப் பகைஞன் (180:1-2,7)
என்றுரைப்பர்.
பிசிராந்தையார் கோப்பெருஞ்சோழனைக் குறித்திடும்போது பாணர் சுற்றத்தின் பசிக்குப் பகைவன்
என்னும் பொருளில் ‘பைதற் சுற்றத்தின் பசிக்குப் பகையாகி’ (272) என்று பாடுவர். மன்னர்கள்
வருவோர் பசித்துன்பத்திற்கு முக்கியத்துவமளித்து பேணுதலால் அவர்கள் அடைச்சிறப்பு பெற்றிருந்தமை
புலனாகிறது.
பொருளற்ற நிலையிலும் அருளும்
பண்பு
பொருளில்லா நிலையிலும் வள்ளன்மை குன்றா மாண்பினை
உடையவராக வள்ளல்கள் திகழ்ந்துள்ளனர் என்பதைக்
கைப்பொருள் யாதொன்று மிலனே நச்சிக்
காணியசென்ற விரவன் மாக்கள்
களிறோடு நெடுந்தேர் வேண்டினுங்
கடவன் (313:2-4)
என்னும்
பாடலடிகள் உணர்த்தி நிற்கின்றன.
இரந்து நிற்போருக்கு எளியனாயிருத்தல்
மன்னர்
வீரத்தினை எடுத்துரைக்கும்போது புலவர்கள் இரந்து நின்றால் நாடுகளைப் பரிசாகத் தருகுவர்
என்றுரைத்தலால், இரப்போர்க்கு இன்னது என்றில்லாமல் பரிசுகளை அள்ளித்தரும் கொடைமடத்தினைக்
காண்கின்றோம். இரவலர் கேட்டால் நாட்டையும் தருகுவன் பாரி; ஆதலின், பகைவர்களே உங்கள்
உரிமை மகளிர் நீங்கள் விறலியராகவும் பரிசிலராகவும் வாருங்கள் (109). என்று புலவர் பாடுவதும்,
மெல்ல
வந்தென் நல்லடி பொருந்தி
ஈயென இரக்குவர் ஆயிற் சீருடை
முரசுகெழு தாயத்து அரசோ
தஞ்சம்
இன்னுயிர் ஆயினுங் கொடுக்குவன்
……..’ (73:1-4)
என்று
சோழன் நலங்கிள்ளி உரைப்பதும் இச்சோழன் நலங்கிள்ளியைக் கோவூர்கிழார் பாடும்போது இழைபெற்ற
விறலியர் தலையிற் சூடிக்கொள்ளும் பூவிற்கு விலையாக மாடமதுரையைப் பரிசாகத் தருவான் என்றுரைப்பதும்
இரவலர்க்கு மன்னன் எளியனாய் இருத்தலை விளக்குவன.
பாசறையில் கொடை
பாசறை
இருப்பினில் தம்மை வாழ்த்தும் பாணர்களுக்கு பரிசில் வழங்கும் மன்னர் அருட்திறத்தினைக்
காண்கின்றோம்.
ஊன் சோற்றமலை பாண்கடும்பு அருத்தும்
செம்மல் அம்மநின் வெம்முனை
இருக்கை (33)
என்னும்
அடிகள் சான்றாகின்றன.
பகைநாட்டு இரவலர் வருகை
சோழன் கிள்ளிவளவனைப் பகை நாட்டில் உள்ள இரவலர்கள்
தேடி வந்து பரிசினைப் பெற்றுச் செல்வார் என்று ஆவூர் மூலங்கிழார் புகழ்ந்துரைக்கின்றார்.
இதன்மூலம் செல்வமுடையோர் வறியோர்க்கு வழங்குதலும்
வறியோர் செல்வம் உடையோரைச் சென்று இரத்தலும் இயற்கை என்பதை உணர்ந்த மன்னனைப்
பகைநாட்டு இரவலர்களும் தேடிவருபவனாக விளங்குவதில் கிள்ளிவளவனின் விழுமியத்தை உணர்கின்றோம்.
புலவர்களின் விழுமியங்கள்
இரப்போராகப் புலவர்கள் இருந்தாலும் அப்புலவர்கள்
தன்க்கென சில சீரிய எண்ணங்களைக் கடைபிடித்தனர்.இரப்போர் பரிசு கிடைக்கப் பெறாவிடின்
விலகுதல், பரிசினை ஏற்க மறுத்தல் போன்ற ஒப்பற்ற விழுமியங்கள் புறநானூற்றில் விரிந்து
அமைகின்றது.
பரிசில் பெறாமையால் வருந்துதல்
ஈயா ஆயினும் இரங்குவன் அல்லேன்
நோயிலை ஆகுமதி பெரும. (209:13-14)
என்று
பெருந்தலைச்சாத்தனின் பாடலடிகளில் மூவனிடம் பரிசு பெறாது வருந்தும் புலவனின் உள்ளத்தைக்
காண்கின்றோம்.பரிசில் பெறாதபோது கொடாதாரைப் பழித்தல் இரவோர் இயல்பு. இங்கு அவனைப் பழியாது
நோயில்லாமல் வாழ்வாயாக என்று வாழ்த்தியமையை அறிகின்றோம்.
மன்னன் பரிசில் தராத நிலையில் வருந்தும் போக்கினைப்
பெருங்குன்று கிழார் புனைவுகளிலும் காணமுடிகிறது. ’பரிசில் தருவது போன்ற ஒரு மாயையினைத்
தந்து என்னை ஏமாற்றினாய்.. நீ நாணும்படியாக நானும் நின் புகழைப் பாடுகின்றேன். பாடியதை
ஏற்றுக் கொண்டு பரிசில் தராது ஒழிந்தாய். என் வருத்தம் கண்டு நாணினாய் இல்லை. குழந்தை
பாலின்மையால் வற்றிய தனது மார்பினைச் சுவைத்து நிற்க என் மனைவி வருந்தும் தரம் சொல்லத்தக்கதன்று’.
இவ்விருவரையும் எண்ணி விடைபெறுகின்றேன் என்று பாடுவர்.
வள்ளல்கள் பரிசில் நீட்டிப்பதற்கு மீண்டும் மீண்டும்
இரவலர்கள் தேடி வருதல் ஒரு காரணமாக அமைவதை ஊன்பொதி பசுங்குடையார் குறிப்பிடுகின்றார்.
எனினும் அக்காரணத்திற்காக இரவலர்க்கு வழங்கும் கொடையினை நிறுத்தக் கூடாது என்பதனை உவமை
மூலம் விளக்கியுரைப்பர். ‘முன்னே நல்ல மழையைப் பெய்தோமென நினைத்து மழை இப்போது பெய்யாது
ஒழியுமாயின் விளைநிலங்களும் தாம் முன்னே நிறைய விளந்தோமென்று இப்போது விளையாமற் போமாயின்
எவ்வுயிருக்கும் இவ்வுலகில் உயிர்வாழ்க்கை இல்லை.’ முன்னே நீ நிறைய தந்தனை ஆதலின்,
பின்பும் இவ்வாறு நீ தருவாய் என்று பாவலன் இரக்கும்போது முன்னர் தந்தது கூறி மறுப்பின்
மிகக் கொடிது. இரவலர் புரத்தல் புரவலனின் சீரிய கடமை என்றுரைப்பர்.(203).
பரிசில் குறைவென்று மறுக்கும்
மாண்பு
இருகண்களால்
கண்டும் காணார்போல முகம் கசந்து நல்குவார் பரிசில் பெரிதாயினும் இரவலர் விரும்பார்.
வருகவென வரவேற்று நல்குவது சிறியதாயினும் ஏற்றல்தக்கது; அதுவே நம் வரிசைக்கும் தகுதி;
வரிசையுடைய உலகம் பெரிது; நம்மை விரும்பி ஏற்கும் பெரியோர் பலர் உளர் என்று பெருஞ்சித்திரனார்
இளவெளிமானின் பரிசிலை ஏற்க மறுக்கும் திறத்தினைக் காண்கின்றோம். ’அகனக வாரா முகனழி பரிசில் தாளிலாளர் வேளாரல்லர்’
என்னும் பாடலடிகள் இதனையுணர்த்தும். பிறிதொருபாடலில், புலவர் மன்னன் தரும் பரிசினை
ஏற்க இயலாமையை உவமை வாயிலாக வெளிப்படுத்துவர். வேட்டையில் களிறு பிழைத்தவிடத்துப் புலி
எலியை வேட்டையாடாது: அது போன்று மன்னர் தரும் பரிசினை ஏற்க இயலாது என்பது புலவரின்
மாண்பினை எடுத்துரைக்கும்.
வரிசையறிந்து நல்காப் பரிசினை
மறுத்தல்
திருமுடிக்காரியைக்
கபிலர் பாடும்போது வரிசையறிந்து பரிசு நல்கவேண்டும் என்றுரைப்பர். வள்ளலை நினைந்து
நாற்புறத்திலும் பரிசிலர் வருவர்; கொடுத்தலும் எளிது. ஆனால் நீ வரிசையறிந்துகொடுத்தல்
நலம் என்பர். இதனை,
ஈதல் எளிதே மாவண் தோன்றல்
அதுநன் கறிந்தனை யாயிற்
பொதுனோக் கொழிமதி புலவர்
மாட்டே (121:4-6)
என்னுமடிகள்
உணர்த்தும்.
வள்ளியோர் செவிமுதல் வயங்குமொழி வித்தித்தாம்
உள்ளியது முடிக்கும் உரனுடை
உள்ளத்து
வரிசைக்கு வருந்தும் இப்பரிசில்
வாழ்க்கை
பரிசிலர்க்கு அடையா வாயிலோயே
…… ( 206:1-4)
என்னும்
ஒளவையார் பாடலில் அதியனின் வரிசையறியாப் பண்பினைக் கண்டிக்கும் போக்கினைக் காண்கின்றோம்.
’புலவர்க்கு எத்திசை செல்லினும் அத்திசைச் சோறே’ என்று கூறி வெளியேறும் புலவரிடம் வரிசையறியா
மன்னனின் பரிசினை ஏற்க மறுக்கும் பாங்கினை அறிகின்றோம். யாங்கள் வெறுஞ்சோறு உண்பதன்று
இப்பரிசில் வாழ்க்கை; எம்கல்வி கொண்டு எத்திசை சென்றாலும் எங்களூக்கு உணவுக் குறைபாடு
கிடையாது. கடுமான் அஞ்சி என்தரம் அறியலனோ? அல்லது தன்தரம் அறியலனோ? என்று கூறியகல்கின்றார்.
ஒளவையார் காலம் தாழ்த்தியமைக்கு மறுத்துவிட்டுச் செல்ல பெருஞ்சித்திரனார் அதியன் காணாது
தந்த பரிசினை மறுத்துவிட்டுச் செல்லும் விழுமியத்தைக் காண்கின்றோம்.
அதியன் என்னைக் காணாது நல்கும் பரிசினை யான் ஏழேன்;
குன்றுகளையும் மலைகளையும் கடந்து நெடிய வழி நடந்து பரிசில் ஒன்றே கருதி யான் வந்தேன்
என்று இக்கொடைவள்ளல் யாங்ஙனம் அறிந்தான். என்னைக் காணாது நல்கும் இப்பரிசில் ஏற்பதற்கு
யான் ஓர் வாணிகப் பரிசிலன் அல்லேன் என்பர். ஒப்பற்ற இவரது விழுமியத்தினை,
காணாது ஈத்த இப்பொருட்கு யானோர்
வாணிகப் பரிசிலன் அல்லேன்
பேணித்
தினை யனைத் தாயினும் இனிதவர்
துணையளவு அறிந்து நல்கினர்
விடினே (209:13 – 14)
என்னும்
பாடலடிகளில் உணர்கின்றோம். பெறக்கருதும் ஊதியத்தின் மீது கருத்து செலுத்துவது வாணிகர்
இயல்பு.அவ்வாறு பரிசில் மேல் கருத்தினன் அல்லன் என்பது பெருஞ்சித்திரனாரின் கருத்தாகின்றது.
ஈதல் பண்புடையோரை மட்டும்
பாடுதல்
இளம்விச்சிகோ இளங்கண்டீரகோ இருவரும் ஒருங்கே நாளவையில்
வீற்றிருக்கும்போது பெருந்தலைச் சாத்தனார், இளங்கண்டீரக்கோவை மட்டும் பாடினார். தம்மைப்
பாடாமைக்குக் காரணம் யாதென, இளம்விச்சிக்கோ வினவ புலவர் அஞ்சாது, ஈதல் பண்புடையோரை
மட்டுமே நான் பாடுவேன் என்றுரைக்
-கின்றார்.
’வேந்தே, இக்கண்டீரக்கோ வண்மையாற் புகழ் சிறந்தவன். இவன் நாட்டின் மனைக்கிழவன் அயலூர்
சென்றிருப்பினும் மனையாள் தம் தகுதிக்கு ஏற்பனவற்றை இரப்போர்க்கு ஈந்து புகழ் வளர்ப்பர்.
அதனால் புல்லினேன். நின் முன்னோர்களில் முதல்வன் பெண்கொலைபுரிந்த நன்னனாவான். நின்
நாடு பாடி வருவோர்க்கு கதவடைக்கும் தன்மையதாலின் எம்போல்வார் நினது விச்சி மால்வரையைப்
பாடாது ஒழிந்தனர்; நானும் நின்னைப் புல்லேனாயினேன் என்றார்(151:1-7)
இரப்போர் பொருள் பெற வேண்டும் என்ற பொதுநோக்கினை
மட்டும் கொள்பவரில்லை. புகழ்ச்சிக்காக இன்றி ஒருவனின் பரம்பரை இசைமையாக வாழ்ந்திருந்தால்
மட்டுமே பாடும் மரபினை வளர்தெடுத்தலைக் காண்கின்றோம்.
கொடை கேட்டுப் பெறுதல்
பெருஞ்சாத்தனார்
சிறிது கொடுத்து எள்ளிய இளவெளிமான் கண்டு நாணும்படியாக அவன் முன்னே செல்ல வேண்டும்
என்ற வேட்கையில் குமணனிடத்து இன்னது தருக என்று யானையைக் கேட்டுப் பெறுகின்றார்.
என்னை அறிந்தனை நோக்காது சிறந்த
நின்னினத் தறிமதி பெரும
வென்னும்
வேந்தன் நாணப் பெயர்வேன்
(161).
என்று
கேட்கின்றார்.குமணனிடம் என் தகுதி நோக்காது தன் தகுதி அறிந்து தர வேண்டும் என்பதை இப்பாடல்
வெளிப்படுத்துகின்றது.
இன்னது
தருக என்று புலவர் யானையைக் கேட்டது போன்று தம் வாழ்வை மட்டும் கருதாது மன்னன் வாழ்வும்
சிறக்க வேண்டும் என்று வாழ்ந்த புலவர்களின் விழுமியத்தைப் புறநானூற்றில் காண்கின்றோம்.
பேகன் தன் மனைவி கண்ணகியைப் பிரிந்திருந்த காலத்தில் பரணர் சந்துவிக்கும் முயற்சியில்
ஈடுபடுகின்றார்.
’மயில்
பனிக்குமென அருள்கொண்டு படாம் நல்கிய பேகனே, யாங்கள் பசித்து வந்தோமில்லை; எம்மாற்
புரக்கப்படும் சுற்றமுமில்லை; இன்றே புறப்பட்டு அவளுடைய அருந்துயரைக் களைக. இதுவே யாம்
நின்னை இரந்து பெறும் பரிசில் என்பர்.(145:7-1) இதே கருத்தினைப் பெருங்குன்றூர் கிழாரும்
வெளிப்படுத்துவர். எமக்கு வேண்டிய பரிசில் உன் மனைவியின் கூந்தல் புதுமலர் சூட வேண்டும்.
இதுவே யான் வேண்டும் பரிசில்(147) என்று கூறுகின்றார். ’நின் அருங்கல வெறுக்கை அவைபெறல் வேண்டேம் அடுபோர்ப் பேக’ நீ உன்மனைவியுடன்
இணந்து வாழ வேண்டும் இதுவே நான் விரும்பும் பரிசில் என்பர்.
முகமறிந்து நல்குக
ஈயென இரத்தல் அரிதே நீயது
நல்கினும் நல்காய் ஆயினும்
வெல்போர் (154:8-9)
என்று
மோசிகீரனார் கொண்கானங் கிழானை நோக்கிப் பாடுகின்றார். இரவலன் கேட்டுப் பெறுதல் வேண்டும்
என்பதை விடுத்து முகமறிந்து வறுமையை நீக்கவேண்டும் என்பர்.
முகம் பார்க்காது வழங்குக
வல்லா ராயினும் வல்லுநர் ஆயினும்
வருந்தி
வந்தோர் மருங்கு நோக்கி
அருள் வல்லை
ஆகுமதி அருளிலர் (27:15-17)
அருளும்
கொடையுமுடையவர் இவ்வுலகினை வெல்வர். வறுமையுற்று வந்தோர்க்கு முகம் பார்க்காது வழங்குக
என்று அறிவு பகர்கின்றார் முதுகண்ணன் சாத்தன்.
முகம் மலர்ந்து தருக
பெருஞ்சித்திரனார்
பரிசிலர்க்கு பரிசின் இன்றியமையாமை அறிந்து முகம் மலர்ந்து தரவேண்டும். அவ்வாறு தராத
பரிசிலை நான் ஏற்கேன் என்று கூறும்போது புலவர்க்குப் பெருமிதமும் தன்மான உணர்ச்சியும்
ததும்புவதாகக் குறிப்பர் சாமி.சிதம்பரனார்
உயர்தேந்து மருப்பிற் கொல்களிறு
பெறினும் தவிர்ந்துவிடு
பரிசில் கொள்ளலேன்
உவந்து இன்புற விடுதி யாயிற்
சிறிது
குன்றியுங் கொள்வல் கூர்வேல்
குமண (159:22-25)
என்னும்
பாடலடிகளில் குன்றிமணி உவந்து கொடுத்தாலும் பெறுவேன் என்பதில் வறுமையிலும் உயர் விழுமியம்
காக்கும் புலவரின் பண்பாடு வெளிப்படுகிறது.
காலம் தாழ்த்தாது வழங்குக
காலம் தாழ்த்திக் கொடுக்கப்படும் பரிசினால் பயன்
ஒன்றுமில்லை. மனைக்கு விளக்காகிய மனைவியும் பெற்ற குழந்தையும் கலங்குவர் என்று வருந்தும்
போக்கு பெரும்பான்மையான புலவரிடத்துக் காண முடிகிறது. எனது மனைவி உணவின்றி வாட எம்
புதல்வன் பாலின்மையால் ஒன்றுமில்லாத அடுகலத்தைத் திறந்து அங்கும் உணவின்றி அழுகின்றான்.
அதனைப் பார்த்து என் மனைவி புலையைச் சொல்லி அச்சுறுத்தியும் அம்புலி காட்டியும் தணிக்கக்
கருத, தந்தையைக் காட்டு எனும்போது வருந்தி நின்றனள் என்று பெருஞ்சித்திரனார் குமணனிடத்துத்
தன் குடும்பச் சூழலை வெளிப்படுத்துகின்றார்.(160). இதுபோன்ற கருத்தினைப் பிட்டங் கொற்றன்,
ஒளவையார் முதலானவர்களும் கூறுவர்.
எனது குடும்பம் வறுமையில் உழல்கின்றது. உன் செவ்வி
அறிந்து நிற்கும் காலம் இதுவன்று என்று கூறிவிட்டு மருதன் இளநாகனார் செல்கின்றார்.
அடிவருந்த நெடிது ஏறிய
கொடி மருங்குல் விறலியரும்
வாழ்தல் வேண்டிப்
பொய் கூறேன் மெய் கூறுவன் (139:1-4)
என்னும்
பாடலடிகளீல் இளையமகளிரும் விறலியரும் வாழ்தல் வேண்டி பொய்கூற மாட்டேன், மெய்யே கூறுவன்.
நீ மனம் கனிந்து நிற்கும் காலத்தை நோக்கியிருத்தல் எனது இப்போதைய நிலைமைக்கு ஏற்றதன்று
என்பர். நின் செவ்வி கிடைக்கும்துணையும் என் சுற்றம் பசித்துனொஅம் பெறாது ஆதலால் யாம்
வேண்டும் பரிசிலை இன்றே தருக என்று பாடுகின்றார்.
பண்டைய மறவர் விழுமியம்
மூவேந்தர்,
கடையேழு வள்லல்கள், குறுநிலமன்னர்கள் மற்றும் வள்ளல்கள் ஆகியோரின் கொடைத்திறன் பேசப்படும்
புறநானூற்றில் படைமறவர்களின் கொடை இயல்பும் வியந்தோதப்பட்டுகுள்ளது.
தலைவன் ஊரில் வாழும் முதியோராகிய வேட்டுவர் உடும்பு
கொணர்ந்து அதன் ஊனைச் சுட்டுத் தம்மிற் பகுத்துண்பர். அவருடைய இளஞ்சிறார்கள் வில்லெடுத்து
அம்பு தொடுத்து விளையாடுவர். அத்தகைய ஊரின் தலைவன்,
வேந்து தலை வரினுந் தாங்கும்
தாங்கா வீகை நெடுந்தகை
(325:14-15)
என்று
பாடுவர் முதுகண்ணன் சாத்தனார். பிறிதொரு பாடலில், தங்கால் பொற்கொல்லனார் எனும் புலவர்,
மறவன் மனைக்கிழத்தியின் கொடைப் பண்பினைக் குறிப்பர். நெடுந்தொலைவு செல்லாமல் மடுக்கரையில்
பிடித்துக் கொண்டு வந்த உடும்பினது தசையைப் பெய்து சமைக்கப்பட்ட தயிரோடு கூடிய கூழையும்
புதியவாக வந்த வேறு நல்ல உணவுப்பொருட்களையும் பாணருக்கும் அவரொடு வந்த ஏனையோருக்கும்
ஒருசேரக் கொடுக்கும் விருப்புடையவள் (326) என்று புனைவர். மற்றொரு பாடல் பாணனை விளித்து
தற்போது பசியாறு தலைவன் வந்த பின்பு பரிசு பெற்றுச் செல் என்று கூறும் மனைகிழத்தி கூற்றினைக்
காண்கின்றோம்.
‘பாண, பொழுது மறைந்தது; எம்பாலுள்ளது முயற்கறியே
ஆயினும் தருகுவேம்; உண்டு இங்கிருந்து செல்க; நேற்று வேந்தன் பொருட்டுப் போர்க்குச்
சென்ற தலைவன் நாளை வாகைசூடிப் பெரும் பொருளுடன் வருவான். நின் பாடினி பொன்னரி மாலையணிய
நீ பொற்றாமரை சூடத் தருகுவன்’ என்பாள்.
கடன் வாங்கியாவது
வருவோர்க்கு உணவளித்து வருதலைக் கடமையாகச் செய்து வந்த மறவனை மற்றொரு பாடல் குறிப்பிடுகிறது.
சீறூர்த்தலைவன் ஒருவன் சிலவாய் விளைந்த வரகை அறுத்துக் காலால் மிதித்துக் கொண்டதைக்
கடன்காரர்களுக்குக் கொடுத்தது எஞ்சியதைப் பசித்து வந்த பாணர்க்கு அளிக்கின்றான். பின்வந்த
சுற்றத்தாருடைய வறுமையைப் போக்க வரகு கடன் பெறுகின்றான். இதனை,
தொடுத்த கடவர்க்குக் கொடுத்த மிச்சில்
பசித்த பாணர் உண்டுகடை
தப்பலின்
ஒக்க லொற்கஞ் சொலியத் தன்னூர்ச்
சிறுபுல் லாளர் முகத்தளவ
கூறி
வரகு கடன் இரக்கும் நெடுந்தகை
(327:3-7)
என்னும்
அடிகள் காட்டும்.
அடிக்குறிப்புகள்
1.
சொ.சிங்காரவேலன்,தொல்காப்பியம்(எளிய உரை), செய்யுளியல்,கழக வெளியீடு,சென்னை, முதல்
பதிப்பு, 2005, நூ.எண்.1330
2.
வ.சுப.மணிக்கம், சிந்தனைக்களங்கள், பதிற்றுப்பத்தின் கொடை, மணிவாசகர் பதிப்பகம், சிதம்பரம், முதற்பதிப்பு, 1975,
பக்.160-167.)
3. வே.முத்துலக்குமி, பண்டைத்
தமிழ் இலக்கியங்களில் அறநெறிகள், அனிதா பதிப்பகம், திருச்சிராப்பள்ளி, முதல் பதிப்பு,
1999, ப-114.
4.
சாமி.சிதம்பரனார், எட்டுத்தொகையும் தமிழர் பண்பாடும் ப.219
Comments