புறநானூற்றில்
வாகை
முனைவர் இரமேஷ்
சாமியப்பா,
தமிழ் உதவிப்
பேராசிரியர்,
அரசினர் கலைக்கல்லூரி (தன்னாட்சி),
கும்பகோணம்
சங்க
இலக்கியங்களில் புறப்பொருண்மையை உணர்த்தி நிற்பன புறநானூறும் பதிற்றுப்பத்துமாகும். பதிற்றுப்பத்து,ஓரின மன்னர்களின் வரலாற்றுத் தொடர்புடையதாக
அமைய, புறநானூறு அக்கால அரசமரபுகள், போர்
மரபுகள், கலைமரபுகள் ஆகிய பல்வேறு செய்திகளை வெளிப்படுத்தித்
தமிழரின் வரலாற்றுக் கருவூலமாய்த் திகழ்கின்றது. போர்த்திணை பற்றிய
புறத்திணைக் கூறுகளில் ஒன்றான வாகைத்திணைப் பாடல்கள் போர் வெற்றி பெற்றோர் குறித்தும்
மட்டுமல்லாது புலன் வென்றி போன்ற பிறதுறை வென்றிகளின் இலக்கணத்தையும் எடுத்துரைக்கின்றன.
வாகை : சொல் விளக்கம்
வாகை
என்பது வெற்றி கூறுவதாகும்.
முதன்முதலில் வாகை என்னுஞ் சொல் பாலைக் கருப்பொருளாகிய வாகை மரத்தைக்
குறித்து பின்னர் திணைக்கும் பொருந்தி வருவதாயிற்று. வீரமே
துணையாக - அதுவே முதன்மையாகக் கொண்டு நிகழ்ந்தது தும்பைத்திணைப் போர். அப் போரில்
வென்றோர் சிறப்பினை விளக்குவது வாகைத்திணை. வென்று நின்ற வீரரும் மன்னனும் வாகைப்
பூச் சூடி மகிழ்ந்து ஆரவாரித்தல் இயல்பு. திணையும் துறையுமாக இவை முப்பதாக விரித்துரைக்கும்
தொல்காப்பியர்,
தாவில்
கொள்கைத் தத்தம் கூற்றை
பாகுபட
மிகுதிபடுத்த லென்ப
என இலக்கணம்கூறுகிறார்.
தொல்காப்பியம் சுட்டும் வாகை மரபுகள்
தொல்காப்பியர் மாந்தர் தொழிற்
அடிப்படையில் வாகையினை எழு கூறாக வகுத்தத் தொல்காப்பியர்,
போர்த்துறைகளான மறத்துறைகள் ஒன்பதும் இல்லற, துறவறம்
கூறும் அறத்துறைகள் ஒன்பதுமாக பதினெட்டுத் துறைகளைப் பின்னர் விரிக்கின்றார்.
புறநானூற்றில் வாகை
வாகைத்திணைப் பாடல்களை உ.வே.சா துறைவாரியாக
எண்ணி 77 பாடல்களைத்
தருகின்றார். அவை வருமாறு,
1.
அரசவாகை : 19, 20,
21, 22, 23, 25, 26, 31, 37, 42, 43, 44, 51, 52, 53, 54, 61, 66, 76, 77, 78, 79,
81, 82, 93, 94, 98, 99, 100, 104, 125, 167, 168, 174. (35 பாக்கள்)
2.
ஏறாண்முல்லை : 86, 296
(2 பாக்கள்)
3.
மறக்களவழி : 368,
369, 370, 371, 373 (5 பாக்கள்)
4.
மறக்கள வேள்வி : 372 ( 1
)
5.
பார்ப்பன வாகை : 166,
305 ( 2 பாக்கள் )
6.
தாபத வாகை : 251,
252 ( 2 பாக்கள்)
7.
மூதின்முல்லை : 279,
288, 306, 308, 312 ( 5 பாக்கள் )
8.
வல்லாண் முல்லை : 170,
178, 179, 180, 181, 313-322, 326-335.(25 பாக்கள்)
மேற்கூறப்பட்ட ஒன்பது துறைகளில் அமைந்து
காணப்படும் எழுபத்தியேழு பாடல்களும் புறநானூற்றில் வாகை என்னும் இக்கட்டுரையில் ஆய்வு
பெறுகின்றன.
1. அரச
வாகை
அரச
வாகையில் அமைந்த 35 பாக்களும் அரசர்களின் பெருவெற்றியைக் குறிப்பனவாகும். தலையாலங்கான வெற்றி
ஏழு பாடல்களிலும் அதியமான் குறித்து ஔவையார் பாடிய ஆறு பாடல்களும் உள்ளன. முப்பத்தி
ஐந்து பாடல்களில் பத்தொன்பது பாடல்கள் அரசனின் ஒரு குறிப்பிட்ட போர் வெற்றியை மட்டும் பாடுவனவாக அமைகின்றன. 43ஆம் பாடல் மட்டும் பிழை பொறுத்த மன்னனின் குணவென்றி குறிப்பிடப்படுகிறது.
சோழன்
மாவளத்தான் சோழன் நலங்கிள்ளியின் தம்பியாவான். எளிதில் வெகுளும் இயல்பின னாயினும், நல்லதன் நலமுணரும் நயம் மிக்கவன். சோழன் திருமாவளவன் வேறு; இவன் வேறு. ஒருகால் இவனும் ஆசிரியர் தாமற்பல் கண்ணனாரும் வட்டாடினர்.
வட்டுக்களில் ஒன்று தாமற்பல் கண்ணனாரை யறியாமல் அவர்க்கீழ் மறைந்து விட்டதாக,
அதனைப் பின்புணர்ந்த மாவளத்தான் வெகுண்டு, அவரை
அவ் வட்டினால் எறித்தான். உண்மை கூறவும் ஓராது. வெகுண்டெறிந்த அவன் செய்கையை
இகழ்ந்து அப் புலவர், “வேந்தே, நின்
செயல் பொருந்துவ தன்று; நின் குடிப் பிறந்தோர்க்கு இச் செயல்
இயல்பன் றாதலின், நின் பிறப்பின்கண் ஐயமுறுகின்றேன்” என வருந்தி யுரைத்தார் அதனைக் கேட்டதும் மாவளத்தான் தன் தவற்றினை
யுணர்ந்து, நாணி, மனம் கலங்கினான்
( ஔவை சு. துரைசாமிப்பிள்ளை, பக். 117). இதனைக் கண்ணுற்ற புலவர்
நீபிழைத்
தாய்போ னனிநா ணினையே
தம்மைப்
பிழைத் தோர்ப் பொறுக்குஞ் செம்மல்
இக்குடிப்
பிறந்தோர்க் கெண்மை காணுமெனக்
காண்டகு
மொய்ம்ப காட்டினை யாகலின்
யானே
பிழைத்தனென் சிறக்கநின் னாயுள் (43: 17-21)
என்று அவன்
குணத்தின் தன்மையை வியந்து பாடுவர். பொறுத்தற்கரிய பிழையைப்
பொறுத்த குணவென்றியான் அரசவாகை
யாயிற்று என்பதை அறிகின்றோம்.
இத்துறையில் பதினெட்டுப் புலவர்கள்
பாடியுள்ளனர். குறிப்பாய் ஔவையார் இத்துறையில் ஆறு பாக்களில் அதியமானைப் பாடி
இத்துறை பாடியோரில் முதன்மையராகின்றார். பிற வீரத்துடன் குடியோம்பலையும்
கொடையினையும் இணைத்துப் பேசுகின்றன.
முனைதரு பூசல்
கனவினு மறியாது
புலிபுறங்
காக்கும் இகுளை போல
மெலிவில்
செங்கோன் புறங் காப்ப ( 42: 9-11)
எனவும்
புலவ
ரெல்லா நின்னோக்கினரே
----------------------------------------------
மாற்றிடு
வேந்தர் மண்ணோக்கினையே (42 : 21-24)
என்று
புகழும் வரிகளில் குடியோம்புதலும் கொடையும் வீரநோக்கில் அமைவதைக் காண்கின்றோம். இப்பாடல்கள்
அனைத்தும் ஐவகைமரபு அரசபக்கமான படை வழங்குதல்,
குடியோம்புதல், பெரும்பகை தாங்கும் வேல்,
அரும் பகை தாங்கும் ஆற்றல், பிழைத்தோர்த் தாங்கும்
ஆற்றல் ஆகிய துறைப் பொருண்மைக் கருத்தினைக் கூறுவனவாக அமைகின்றன.
2. ஏறாண்
முல்லை
தொல்காப்பியத்தில்
இத்துறை இன்மையும் இளம்பூரணர் வெட்சித்திணையில், மறங்கடை
கூட்டிய துடிநிலை என்னும் நூற்பாவுரையில், ’ஆண்பாற்பற்றி
வந்தனை இல்லாண்முல்லை எனவும் பெண்பால் பற்றி வருவன மூதின் முல்லை யெனவும்
கூறுவதில் இல்லாண்முல்லை’ என்று குறிப்பிடுவதை
வெண்பாமாலையார் ஏறாண்முல்லை என்பர். புறநானூற்றில் இருபாடல்கள் இத்துறையில்
அமைகின்றன. ’ஈன்ற வயிறு இதுவே, என்ற
வீரத்தாய் கூற்றில் அமைந்த பாடலில் வீரன் இருக்குமிடம் போர்க்களம் என்பது
பெறப்படுகிறது.
யாண்டுள
னாயினு மறியேன்
தோன்றுவன்
மாதே போர்க்களத் தானே(86:3,6)
என்னும்
தாயின் கூற்றில் வீரவுணர்ச்சி காட்டப்படுகிறது. பிறிதொரு பாடலான 289ஆம் பாடலில் போர்க்காலத்தில் வீரக்குடியினரின் வீரவுணர்வு வெளிப்படுவதைக்
காண்கின்றோம்.
ஏறாண்
முல்லை என்னும் தொடருக்கு ஏறு(சிங்கம்) போன்ற ஆண்மகனின் இருப்புநிலை என்பது
பொருள்.புறநானூற்றுப் பாடல்களுக்குத் தரப்பட்டுள்ள துறைகளில் ஏறாண் முல்லை என்பதும்
ஒன்று. இது வாகைத்திணயின் துறை. புறநானூற்றில் இத்துறைப் பாடல்கள் இரண்டு உள்ளன.
வல்லாண் முல்லை பற்றிக் கூறும் தொல்காப்பியம் இதனைத் தனியே குறிப்பிடவில்லை.
புறப்பொருள்
வெண்பாமாலை வாகைத்திணையின் 33 துறைகளில் ஒன்றாக இதனைக்
குறிப்பிடுகிறது. எதிர்ப்பார் இன்றி ஒடுங்க வைத்து ஏற்றம் பெற்ற குடியின்
பெருமையைக் கூறுவது இத்துறை.வீட்டுக்கு ஒருவராக நாட்டைக் காக்கும் போருக்குச்
செல்கிறார்கள். சின்னக் குடிசையில் தூணைப் பற்றிக்கொண்டு நிற்கும் தாயிடம் அவளது
மகனைக் கேட்கிறார்கள். அவள் சொல்கிறாள். “என் மகன் எங்கு
இருக்கிறானோ எனக்குத் தெரியாது. எனினும் அவன் போர்களத்தில் உங்களுக்கு முன்னே
நிற்பான்” என்கிறாள்.போருக்குச் சென்றவர்களெல்லாம் காயம்
பட்டுக் கிடக்கிறார்கள். வேப்பந் தழையை ஒடித்து விசிறுகிறார்கள். போர்த்திறத்தைக்
காஞ்சிப் பண் கூட்டிப் பாடுகிறார்கள். ஐயவி என்னும் வெண்சிறு கடுகு எண்ணெய்
தடவுகிறார்கள். ஒருவன் மட்டும் தேரில் ஏறிச் செல்கிறான். இவன் பகை வேந்தனைச்
சாய்ப்பான் போல் காணப்படுகிறான்.
3. மறக்களவழி
களவழி எனத் தொல்காப்பியர் குறிப்பிடும்
இத்துறையானது பிற்கால வழக்காக மறக்களவழி, மறக்களவேள்வி என்று
இருதுறையாகப் பாகுபடுத்திக் கூறப்பெற்றுள்ளது.
ஏரோர்
கலவழி அன்றிற் களவழித்
தேரோர்
தோற்றிய வென்றியும் (தொல். புறத். 3: 75:3-4)
எனத்
தொல்காப்பியம் களவழித்துறைக்கு இலக்கணம் கூறுகின்றது. புறநானூற்றில் ஐந்து பாக்கள்
இத்துறைப் பாடல்களாக அமைகின்றன. இப்பாடல்கள் அனைத்தும் களத்திற்
பாடப்பெற்றமைக்குப் பாடல்களில் குறிப்பு காணப்படுகின்றன. களத்திற்கு வந்த பொருநன்
மன்னனை விளித்து முன் வாழ்ந்த பொருநர் வறுமை தொலைக்கப் போர்க்களம் வந்து படையவை
போல நானும் வந்தேன் என்பதும்(373) மன்னன் பொருநனின்
வருகைக்காகப் போர்க்களத்தில் காத்திருப்பதும்(369) பிற
மூன்று பாடல்களும் களங் கிழவோயே என்று மன்னனை விளிப்பதாலும் களப்புனைவாலும்
களத்தில் பாடப்பெற்றன என்பது புலனாகிறன.
ஐந்து பாக்களிலும் வேந்தனை உழவனாக செருக்களத்தை நிலமாகச் சித்திரிக்கும்
மாண்பினைக் காண்கின்றோம். இதனை, ”வாளேருழவ” (368), ”யானை கொண்மூவாக”(369, 373), “வாளுரு கடா”
(370, 373), என்ற சொற்றொடர்கள் விளக்கி நிற்கின்றன.
4. மறக்களவேள்வி
தொல்காப்பியர்
இத்துறையினைத் தனித்துக் கூறாதொழிய வெண்பாமாலையார்,
அடுதிற லணங்கார
விடுதிறலான் களம்வேட்டன்று (160)
என்று
இலக்கனம் கூறுகிறார். இத்துறைக் குறிப்பானமைந்த புறநானூற்று 372ஆம் பாடல், தலையாலங்கானத்துச் செருவென்ற
நெடுஞ்செழியனின் கள வேட்டச் செய்தி கூறப்படுகிறது. பொருநன் பரிசில் வேண்டுமாறு அமைந்த
இப்பாடலில்,
பொருந்தாத்
தெவ்வ ரருந்தலை யடுப்பிற்
கூவிள விறகி னாக்குவரி நுடங்க
ஆனா
மண்டை வன்னியந் துடுப்பின்
ஈனா
வேண்மா ளிடந்துழந் தட்ட
மாமறி
பிண்டம் வாலுவ னேந்த
வதுவை
விழவிற் புதுவோர்க் கெல்லாம்
வெவ்வாய்ப் பெய்த புதுநீர்
சால்கென (372: 5-11)
வேள்வி செய்தான்
என்று போர்ப் பாசறை குறித்த செய்தினை விரிவாய்ப் பெற்றிலங்குகிறது.
5. பார்ப்பன
வாகை
புறப்பாட்டில்
இரண்டு பாக்கள்
(166, 305) இத்துறைத் தொடர்பானவை. பூஞ்சாற்றுர்ப்
பார்ப்பான் கௌணியன் விண்னந்தாயனை ஆவூர் மூலங்கிழார் பாடியது. அவன் வேள்வியாற்றிய திறனும் விருந்தோம்பலும் கூறிய பின்னர் வாழ்த்துப் பகுதி
அமைகிறது.
நீர்நாண நெய்வழங்கியும்
எண்ணாணப் பலவேட்டும் (புறம்.166 : 21-22)
என்னும் வரிகளில்
வேள்விகள் பலசெய்தமை கூறுகின்றார். அனைத்து
மாந்தர்களுக்கும் பொதுவான விருந்தோம்பல் என்னும் பண்பு நிலையில் தவறாது ஒழுகியும் சிறப்பு நிலையில் பார்ப்பானுக்குரிய
சிறப்புக் கூறுகளான வேதக்கல்வி, பலவேள்வி செய்தமையால் பெற்ற
புகழ்நிலை ஆகியன இப்பாடல்களில் கூறப்படுவதால் இது பார்ப்பன வாகையாகின்றது.
பார்ப்பன முல்லை
தொல்காப்பியர்
இப்பெயரில் துறை கூறவில்லை.
புறப்பொருள் வெண்பாமாலை,
கான்மலியும்
நறுந்தெரியற் கழல்வேந்த ரிகவிக்கும்
நான்மறையோ நலம்பெருகு
நடுவுநிலை உரைத்தன்று (172)
என்று துறை
விளக்கம் தருகிறது.
ஒருதிறமும் சாயாத நடுநிலையில் நின்று போர் தவிர்க்கும் பார்ப்பானைப்
பற்றி இத்துறை பேசுகின்றது. பார்ப்பானின் போர் நிறுத்த முயற்சியான்
அமைந்த புறநானூற்றுப் பாடல்(305) போர் நிறுத்தம் செய்ய முயன்றவனின்
சிறப்புக் காட்டப்படுகிறது. இதனை,
சொல்லிய
சொல்லோ சிலவே அதற்கே
ஏணியுஞ்
சீப்பு மாற்றி
மாண்வினை
யானையு மணிகளைந் தனவே (305 : 4-6)
என்ற பாடலடிகள்
உணர்த்தி நிற்கும்.
இதற்கெனத் தனித்துறை இன்மையால் பார்ப்பன வாகையே இத்துறைக்கும் புறநானூற்றுத்
தொகுப்பாசிரியர் கொண்டனர். வெண்பாமாலையார் பின்பற்றிப் பார்ப்பன
முல்லை என்று துறை கூறாது பார்ப்பன வாகை என்றே குறிக்கின்றார்.
6. தாபத
வாகை
தொல்காப்பியர் தாபதர் செயல்களைக்
குறிப்பிட வெண்பாமாலையார் துறை நோக்கில் இலக்கணம் காண்கிறார்.
தாபத முனிவர்
தவத்தொடு முயங்கி
ஓவுத லறியா
வொழுக்குரைத் தன்று
( 188)
என்ற கொளுவானது, தவவொழுக்கம் மேற்கொண்டு அவ்வொழுக்கத்தில் வழுவாதிருப்பது தாபத வாகை என்றுரைக்கிறது.
புறநானூற்றில் மாற்பித்தியாரின் இரு பாடல்கள் இத்துறையினதாக அமைகின்றன.
தவத்தின் இலக்கணைத்தை வரையறுத்துக் கூறுவதாக அமையினும் பாடல்களின் முன்பின்னாக
இல்வாழ்க்கையினை இணைத்துக் கூறுகின்றன. ஓவியம் போன்ற அழகுள்ள
இல்லங்களில் கொல்லிப்பாவை போன்ற அழகுடைய மகளிரின் இழை நெகிழ்ந்த செய்தியினை ஒரு பாடலும்(251),
’இல்வழங்கு மடமயில் பிணிக்கும் சொல்வலை வேட்டுவ னாயினன் முன்னே’
(252:4-5) என்று மற்றொரு பாடலும் இல்லறப்பகுதியினை எடுத்துரைப்பதன் மூலம்
இல்லற நிறைவு கண்டவரே துறவற வாழ்க்கை மேற்கொள்ளுதல் இயல்பு எனப் பெறப்படுகிறது.
காட்டில் உறைதல், அருவியாடல், சடைமுடி புனைதல்,செந்தீயீட்டல், எளிய புல்லரிசி உணவு உட்கொள்ளுதல், ஆகிய தவிசிகளின் செயல்களை
மேற்கொண்ட ஒருவனை இவ்விரு பாக்களும் பேசுகின்றன.
7. மூதின்
முல்லை
வீரக்குடிமகளிரின் வீரம்
மேம்பட்ட இயல்பை உரைக்கும் மூதின் முல்லை துறை குறித்துத் தொல்காப்பியர் கூறாதொழிய
வெண்பாமாலையார் இத்துறை இலக்கணமாக,
அடல்வே லாடவர்க்
கன்றியு மவ்வில்
மடவரன் மகளிர்க்கு
மறமிகுத்தன்று
(175)
என்று குறிப்பர். “கெடுகசிந்தை கடிதுஇவள் துணிவே மூதின் மகளிர் ஆதல் தகுமே”
என்னும்
புறநானூற்றுப் பாடல் இத்துறையை மிகப்
பொருத்தமாக விளக்குகிறது. பெண்களின் வீரவுணர்வு இத்துறையின் கருத்தாக அமைகின்றன. புறநானூற்றில் ஐந்து பாடல்கள்
உள. மகனின் போர்க்கடமையாகத், ”ஒருமகன் அல்லது இல்லோள் செருமுகம்” நோக்கித் தன் சிறுமகனைப்
போருக்கு அனுப்பும் தாய்(279), ”களிறெறிந்து பெயர்தல் காளைக்குக்
கடனென’(312) எண்ணும் தாய், தம்தலைவனும்
அரசனும் பகை பெறுதல் வேண்டும் என விரும்பும் மனைவி(306), மார்பில்
பட்ட வேலினைப் பிடுங்கி யானை மீதெறிந்த கணவனின் புகழ் பாடும் மனைவி(308) என்று பாடல்களில் குடும்பப்பெண்கள் விரும்பிய வீரத்தன்மை வெளிப்படுகின்றன.
மூதின்முல்லைப் பாடல்கள் சில மகளிர் வீரம் மட்டுமல்லாது விருந்தோம்பல்,
பெரும்படைக்கு அஞ்சாத ஒருவனின் தறுகண்மை பற்றிய குறிப்புகளுடன் ஆடவரைக் குறிப்பனவாக அமைந்துள்ளன.
8. வல்லாண்
முல்லை
வல்லாண்
முல்லை என்னும் தொடருக்கு வலிமை பெற்ற ஆண்மகனின் இருப்புநிலை என்பது பொருள்.
புறநானூற்றுப் பாடல்களுக்குத் தரப்பட்டுள்ள துறைகளில் வல்லாண் முல்லை என்பதும்
ஒன்று. இது வாகைத்திணையின் துறை. புறநானூற்றில் இத்துறைப் பாடல்கள் 25 உள்ளன. ’புல்லா வாழ்க்கை வல்லாண் பக்கமும்’
(தொல்.புறத்.3:75.9) என்ற தொல்காப்பியத்
தொடரில் சிறிய எளிய வளங்குன்றியச் சூழலிலும் கொடை செய்யும் வாய்ப்பு நேரின் வளம்
தளராது எதிர்நோக்கும் வலிய ஆண்தன்மை என்று இளம்பூரணர் விளக்கம் தருவர். இக்கருத்துக்கு
அரணாக, புறநானூற்றுப் பாடல்களில் பாண்டியன் கீரஞ்சாத்தனைத் தவிர
பிற பாடல்கள் அனைத்தும் சீறூர், குறுநில மன்னர்களைச் சுட்டுவனவாக
அமைகின்றன. இப்பாட்டுடைத்தலைவர்களிற் சிலர் பெருவேந்தர்களின்
வலியுடையராய்த் திகழ்ந்துள்ளனர். வறுமையுற்ற போதும் பிறர் பசி
தீர்க்கும் பண்புடையராய்த் திகழ்ந்தனர் என்பதை,
செருநை வந்த
விருந்திற்கு மற்றுத்தன்
இரும்புடைப்
பழவாள் வைத்தனன்
(316:3-5)
என்ற
அடிகள் பொருளில்லாச் சமயத்திலும் விருந்தளித்த அவர்களின் வல்லாண்மையை விளக்குவன.
தொகுப்புரை
வாகை
என்பது வெற்றியாகும்.
வாகை என்னும் சொல் முதலில் மரத்தையும் பின்னர் திணை, ஊர், களம் என்ற பலபொருள்களில் ஆளப்பட்டுள்ளது.
தொல்காப்பியர்
வாகையின் முதல் ஏழு கூறுகளைக் கூறியபின்னர் அறத்துறை ஒன்பதும் மறத்துறை ஒன்பதுமாகப்
பதினெட்டுத் துறைகளைக் குறிப்பர்.
அரசவாகையானது
அரசர்களின் குறிப்பிட்ட தனிபெரும்வெற்றிச் செய்தியைக் கூறுவதோடு அவ்வரசனின் குடியோம்புதலும்
விருந்தோம்பு பண்பினையும் எடுத்துரைக்கின்றன. ஒருபாடல் மட்டும் அரசனின் குணவென்றி பேசுவது பாடற் பொருண்மையில்
வேறுபட்டதாக அமைவதாகும்.
ஏறாண்முல்லை, மூதின்முல்லை, பார்ப்பனமுல்லை என்பது தொல்காப்பியரால்
குறிப்பிடாத புறநானூற்றில் காணப்படும் துறைகளாகும். வல்லாண்முல்லை
என்பது வன்புலங்களில் வாழும் தலைமக்களின் வலிமையினையும் மூதின்முல்லை என்பது மறக்குடி
மகளிரின் நெஞ்சுரத்தையும் ஏறாண்முல்லை என்பது வழிவழிவரும் மறக்குடி மாண்பினையும் எடுத்துரைக்கின்றன.
பார்ப்பன
முல்லையானது வெண்பாமாலையில் இடம்பெற்றுள்ளது எனினும் புறநானூற்றுத் துறைக்குறிப்பு
ஆசிரியரால் பார்ப்பன வாகை என்றே குறிக்கப் பெற்றுள்ளது.
மாற்பித்தியார்
என்னும் பெண்பாற்புலவரால் பாடப்பெற்ற தாபத வாகை பாடல்களில் இல்லறத்தில் வெற்றி பெற்ற
ஒருவன் துறவறத்தில் பெற்ற வெற்றியும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
Comments