பழந்தமிழர்
பண்பாட்டுக் கருவூலமாகத் திகழ்வது பாட்டும் தொகையுமாம். பாட்டு
என்று குறிக்கப்பெறும் பத்துப்பாட்டு நூலுள் ஆற்றுப்படை நூல்கள் செம்பாகமாகும்.
இப்பத்துப்பாட்டு நூல்களுள் முதலாவதாகவும் முருகக்கடவுளைப் பாட்டுடைத்
தலைவனாகவும் வைத்துப் போற்றப்பெறுவது திருமுருகாற்றுப்படை. இந்நூல்,
பதிப்புச்சூழலில் தனித்தும் சங்க இலக்கிய நூல்களுள் ஒன்றாகவும் பின்னர்
பதினொராம் திருமுறை நூல்களுள் ஒன்றாகவும் வைத்துப் பேசப்பட்டு வருவதாகும். சங்கப்பனுவல்களில் திருமுருகாற்றுப்படைக்கு மட்டுமே பதினைந்துக்கும் மேற்பட்ட
உரையாசிரியர்கள் உரை பெய்துள்ளனர். இத்தகைய சிறப்பு வாய்ந்த திருமுருகாற்றுப்படையின்
பதிப்பு வரலாற்றினை நிரல்படத் தருவது நோக்காகிறது.
தமிழ்ப் பதிப்பு முன்னோடிகள்
மேலைநாட்டார் வருகையால் விளைந்த அச்சு இயந்திரப்
பயன்பாடு மற்றும் கல்வி மறுமலர்ச்சி ஆகியன புதிய நூல்களுக்கு ஆக்கம் தந்தன. அப்புதிய நூல்களைப் பதிப்பித்த தொடக்காலப் பதிப்பாசிரியர்களைப் பதிப்பு முன்னோடிகள்
எனலாம். இவர்களுள்,
ஆறுமுக நாவலர் 1822-1879
சி.வை.தாமோதரன் பிள்ளை 1832-1901
உ.வே.சாமிநாதையர் 1885-1942
எஸ்.வையாபுரிப்பிள்ளை 1891-1955
ஆகியோர் பதிப்புப்பணிகள் குறிப்பிடத்தக்கனவாகும்.
பதிப்புப்பணிக் குறிக்கோள்
பதிப்புப் பணியில் ஈடுபட்டோர் நூல் அச்சிடுவதற்கான
குறிக்கோளினைத் தத்தமது நூல்களுள் குறிப்பிட்டுள்ளனர்.அவையனைத்தையும் தொகுத்து நோக்கின் கீழ்க்கண்ட நோக்கங்களுக்காகப் பதிப்புப்பணி
நடைபெற்றது என்பதை அறிகின்றோம். அவையாவன,
1. ஆங்கிலேய
அதிகாரிகள் தென்னிந்திய மொழியறிவு பெறுதலுக்காக பதிப்பித்தல்.
2. பிழைகளின்றிச்
சுத்தபாடம் கற்பிப்பதற்காகப் பதிப்பித்தல்.(பொதுமை)
3. அழிந்து
போகும் சுவடிச்செய்திகளைப் பாதுகாக்கும் நோக்குடன் பதிப்பித்தல்.
4. தமிழில்
வெளியான அச்சுப்பதிப்புகளில் உள்ள குறைகளை நீக்கிச் செம்பதிப்பாக வெளியிடுதல்.
5. வேண்டுகோளுக்கிணங்க
பதிப்பித்தல்.
6. சுவடியளவிலே
ஆங்காங்கு மறைந்து கிடந்த தமிழர் மரபுச்செல்வங்களை அனைவரும் கற்கவேண்டும் என்ற நோக்குடன்
பதிப்பித்தல் ஆகியன கூறப்பட்டுள்ளன.
சங்க இலக்கியப் பதிப்புகள்
சங்கஇலக்கிய ஆய்வுகள் இன்று, பல்வேறு நோக்கில் நிகழ்த்தப்படுவதற்கு முன்னோடிப் பதிப்பாசிரியர்களின் சங்கப்பதிப்புகள்
உறுதுணையாய் இருந்து வருகின்றன. சங்கநூல்களுள் திருமுருகாற்றுப்படையே
முதன்முதலாக அச்சாக்கம் பெற்றது. அதன் பின்னர் சி.வை.தாமோதரம் பிள்ளை அவர்களால் கலித்தொகை பதிப்பாக்கம்
பெற்றது. பத்துப்பாட்டு முழுமைக்கும் நச்சினார்க்கினியர் உரையுடனும்
மட்டுமல்லாது தொகை நூல்களில் நான்கினை முதன்முதலில் அச்சிட்டு உ.வே.சா தமிழ்த்தாத்தா என்ற பெருமைக்குரியரானார்.
இச்சங்கநூற்களின் முதற்பதிப்பு விவரங்கள் பின்வருமாறு:
1. திருமுருகாற்றுப்படை சரவணப்பெருமாளையர் 1834
2. கலித்தொகை சி.வை.தாமோதரம்பிள்ளை 1887
3. பத்துப்பாட்டு உ.வே.சாமிநாதையர் 1889
4. புறநானூறு உ.வே.சாமிநாதையர் 1889
5. ஐங்குறுநூறு உ.வே.சாமிநாதையர் 1889
6. முல்லைப்பாட்டு மறைமலை அடிகள் 1903
7. பதிற்றுப்பத்து உ.வே.சாமிநாதையர் 1889
8. பட்டினப்பாலை மறைமலை அடிகள் 1906
9. பொருநராற்றுப்படை வா.மகாதேவ முதலியார் 1907
10. குறுந்தொகை செளரிப்பெருமாள் அரங்கன் 1915
11. நற்றிணை பின்னத்தூர் நாராயணசாமி
அய்யர் 1915
12. பரிபாடல் உ.வே.சாமிநாதையர் 1918
13. அகநானூறு ரா.ராகவையங்கார் 1918
இந்நூல்களைத் தொடர்ந்து முதன்முதலாகச் சங்க இலக்கியம்-பாட்டும் தொகையும் என்னுந் தலைப்பில் பேராசிரியர் ச.வையாபுரிப்பிள்ளை
சங்கப்பாடல்களை மூலத்துடனும் புலவர் வாரியாகவும் பதம்பிரித்துக் கற்போர் தாமே பொருளுணரத்தக்க
முறையில் 1940ஆம் ஆண்டு ராஜம் எஸ்.மர்ரே
கம்பெனியாரின் வேண்டுகோளுக்கிணங்கப் பதிப்பித்தார். இப்பதிப்பு
புதிய மாற்றத்திற்கு வலிகோலியது. திணைஅடிப்படையிலான பதிப்புகள்,
திறனாய்வு அடிப்படையிலான பதிப்புகள், பழைய உரைகளைப்
பதிப்பித்தல் மட்டுமல்லாது புத்துரைகள், விளக்கவுரைகள்,
எளிய உரைகள் போன்று மக்கள் எளிதில் படித்துணர்ந்து கொள்ளுமாறு பல பதிப்புகள்
தோன்றலாயின.
திருமுருகாற்றுப்படை முதற்பதிப்பு
பதிப்பியல் சிந்தனைகள் எனும்
நூலாசிரியர் இ.சுந்தரமூர்த்தி அவர்கள் ஆறுமுகநாவலரால்
1851 ஆம் ஆண்டு திருமுருகாற்றுப்படை முதன்முதலில் பதிப்பிக்கப்பெற்றது
என்பர். சங்க இலக்கியப் பதிப்புகள் என்னும் தனது ஆய்வுக்கட்டுரையில்
ந.விசாலாட்சி என்பவர் இந்நூல், சரவணப்பெருமாளையரால்
1902 இல் முதன்முதலாகப் பதிப்பிக்கப்பெற்றது என்று குறிப்பர்.
இரா.ஜானகி என்பாரின் சங்க இலக்கியப் பதிப்புரைகள்
என்னும் நூலுள் 1834ஆம் ஆண்டு சரவணபெருமாளையரால் பதிப்பிக்கப்பெற்றது
என்ற குறிப்புடன் அந்நூலின் தலைப்புப் புத்தகத்தின் நகலும் வெளியிடப்பெற்றுள்ளது.
நகலச்சில் குறிப்பிடப்பெற்றுள்ள சய ஆண்டு 1834 ஆம் ஆண்டா அல்லது 1894ஆம் ஆண்டா என்னும் சந்தேகம் எழுகின்றது.
தொகுப்பாசிரியர் இரா.ஜானகி 1834 என்று அறுதியிடுவதற்கான காரணம் குறிக்கவில்லை. கிடைக்கப்பெற்ற
தகவலடிப்படையில் சங்க இலக்கிய நூல்களுள் 19ஆம் நூற்றாண்டு முதலாவதாகப்
பதிப்பு கண்டது திருமுருகாற்றுப்படை என்பது வெள்ளிடைமலை. 19ஆம்
நூற்றாண்டின் மத்தியில் தொடங்கப்பெற்றத் திருமுருகாற்றுப்படைப் பதிப்புப் பணி சங்க இலக்கியப்
பத்துப்பாட்டில் ஒன்று என்றோ, பதினோராம் திருமுறையில் ஒன்று என்றோ
பதிப்பிக்கப்படவில்லை. இதன் பின்னர் 1889இல் உ.வே.சாமிநாதையர்
பத்துப்பாட்டு மூலமும் நச்சினார்க்கினியர் உரையும் என்று பதிப்பிகிறார். அப்பதிப்புரையிலும்,
’பத்துப் பாட்டு' எனக் குறிக்கும் வழக்கம் மிக முற்பட்டது என்று கொள்ளுவதற்கு இல்லை. இப்
பெயரை இளம் பூரணரும், மயிலைநாதருமே (நன். 387), தத்தம் உரைகளில் குறித்துள்ளனர். பேராசிரியரோ தமது தொல்காப்பிய உரையில் 'பாட்டு' என்றே (செய்யு, 50,80 உரை)
வழங்கியுள்ளனர்(1931) என்று குறிப்பிடுவதன் மூலம்
பாட்டும் தொகையும் என்னும் தொடர் பிற்கால வழக்கு என்னுமுண்மையை உணரலாம். உ.வே.சா அவர்கள் பத்துப்பாட்டுள் ஒன்றாகத்
திருமுருகாற்றுப்படையினை
பதிப்பிக்கும் முன்பே 1853க்கும்
1889க்கும் இடையே ஆறுமுக நாவலரால் இரண்டாம், மூன்றாம், நான்காம் பதிப்பு என தொடர்ச்சியாகப்
பதிப்பிக்கப்பட்டது. திருமுருகாற்றுப்படை நூலானது மூலம்
தனியாகவும், முருகன் தோத்திரபாடற் தொகுப்பாகவும்
பதிப்பிக்கப்பட்டிருக்கிறது.
மூலபாடப் பதிப்புகள்
‘திருமுருகாற்றுப்படை, மூலபாடம், தெய்வத்தன்மை பொருந்திய, மதுரைக்கடைச் சங்கத்து
மகாவித்துவ சிரோ மணியாகிய, நக்கீரதேவர், அருளிச்செய்தது. இஃது தி. சண்
முக ஐயரவர்களால், பார்வையிடப்பட்டு, 1864இல் திரு. சுப்பராயதேசிகரவர்களது, கல்விப் பிரவாகவச்சுக்கூடத்தில், பதிப்பிக்கப்பட்டது.’
என்ற விபரத்துடன் ஒரு மூலப்பதிப்பு வந்திருக்கிறது.
திருமுருகாற்றுப்படை மூலம் மட்டும் காஞ்சி -நாகலிங்க முதலியாரால், 1891ஆம் ஆண்டும் திருமுருகாற்றுப்படை மூலபாடம், அஷ்டாவதானம்
பூவை. கலியாண சுந்தர முதலியாரால் 1892ஆம்
ஆண்டும் பதிப்பிக்கப்பட்டுள்ளது.
தோத்திரப்பதிப்புகள்
தோத்திர நிலையில் ‘விநாயகரகவல், கந்தர் கலிவெண்பா, திருமுருகாற்றுப்படை, பெருந்தேவபாணி, தோத்திரமஞ்சரி, திருச்சிற்றம்பலம், திருவடித்தாண்டகம், போற்றிக்கலிவெண்பா ஆகியதோத்திரச்
சுருக்கம், அ.இராமசுவாமிகளால் விய
வருடம், ஆனிமாதம் 1886 ஆம் ஆண்டு
வெளியிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து
‘திருச்சிற்றம்பலம், கந்தரலங்காரம், கந்தரநுபூதி, கந்தரந்தாதி, திருச்செந்தினிரோட்டக
யமகவந்தாதி, திருச்செந்தூர்ச் சுப்பிரமணியரகவல், திருச்செந்தூர்க்கந்தர் கலிவெண்பா, திருமுருகாற்றுப்படை,
கந்தர்கஷ்டிகவசம் ஆகிய சுப்பிரமணியர் பிரபந்தக் கொத்து, அ.இராமசாமி
சுவாமியவர்களால், பல பிரதிகளைக் கொண்டு பிழையறப் பரிசோதித்து
சர்வதாரி வருடம், வைகாசிமாதம் 1888ஆம்
ஆண்டு பதிப்பிக்கப்பெற்றுள்ளது. இவ்விரு நூற்கொத்துகளுமே வேண்டுகோளுக்கிணங்க
பதிப்பிக்கப்பெற்றதாக அறிகின்றோம். குறிப்பாகக் காரைக்குடி
வட்டார செட்டியார்களின் ஆர்வம் வெளியாகிறது. இன்றும் அவ்வட்டாரத்தில்
வாழும் நகரத்தார் திருமண வீடுகளில் மணவீட்டார் வருகை புரிந்தோருக்கு அன்பளிப்பு
நூல்கள் தரும் வழக்கினைக் கருத்தில் கொண்டு அக்காலத்தில் இவ்விரு பதிப்புகளும்
அவ்வாறு தரப்பட்டிருக்கலாம் என்று கருதுதற்கு இடனுண்டு.
சங்க இலக்கியப் பதிப்புக்காக மட்டுமல்லாது தனியாகவும் திருமுருகாற்றுப்படையை வையாபுரிப்பிள்ளை பதிப்பித்திருக்கிறார். 1937 இல் ‘செந்தமிழில்’ வெளியாகியுள்ள இது 1943 இல் தனிநூலாக வந்துள்ளது.. அடுத்து வையாபுரிப்பிள்ளையே ஒரு புதிய உரையை எழுதி மூலத்துடன் பதிப்பித்துள்ளார். இது சைவ சித்தாந்த மகா சமாஜ வெளியீடாக 1933 இல் வெளிவந்துள்ளது. அடுத்த பதிப்பு அடுத்த ஆண்டே வெளியிடப்பட்டுள்ளது. இப்புதியவுரையுடன் கூடிய திருமுருகாற்றுப்படை1933ஆம் ஆண்டு சமாஜ வெளியீடாகப் பதினோராம் திருமுறையிலும் இடம்பெற்றுள்ளது. சைவ சித்தாந்தப்
பெருமன்றம் வெளியிட்டுள்ள ‘முருகன் முந்நூல்’ (1984) என்னும்
நூலிலும் முதல்நூலாக வையாபுரிப்-பிள்ளையின் உரையுடன் திருமுருகாற்றுப்படை இடம்
பெற்றுள்ளது.
திருமுருகாற்றுப்படை எனும் பத்தி பனுவல் தமிழ் இலக்கிய வரலாற்றில்
பல்வேறு இடங்களில் வைத்துப் பார்ப்பதைப் போல அதன் பதிப்பையும்
பார்த்திருக்கின்றனர். 1870இல்
சுப்பராய செட்டியார் பதிப்பித்த ‘பதினொரந்திருமுறை’ எனும் நூலிலும் நக்கீரர் தோத்திரங்களுள் திருமுருகாற்றுப் படையும்
இடம்பெற்றிருக்கிறது.
உரையுடன் கூடிய பதிப்புகள்
திருமுருகாற்றுப்படைக்கு பழைய உரையாசிரியர்கள் மற்றும் 20ஆம் நூற்றாண்டு உரையாசிரியர்கள்
என்று பதினைந்துக்கும் மேற்பட்ட உரைகள் நமக்கு இன்று கிடைக்கின்றன. மேலும், ஆராய்ச்சியுரை, பதவுரை,
குறிப்புரை என்றும் கஆணப்படுகின்றன. சங்க
இலக்கியங்களில் திருமுருகாற்றுப்படைக்கு மட்டுமே பலர் உரையெழுதியிருப்பதாக
அறியமுடிகிறது. .1834 முதல் வெளியான திருமுருகாற்றுப் படை
பதிப்புகள் நச்சினார்க்கினியர் உரையை மட்டுமே வெளியிட்டன. திருப்பனந்தாள்
காசிமடம் 1959இல் வெளியீட்ட
திருமுருகாற்றுப் படை உரைக்கொத்து, நச்சினார்க்கினியர்,
உரையாசிரியர், பரிமேலழகர், கவிப்பெருமாள், பரி ஆகிய ஐவர் உரைகள்
திருமுருகாற்றுப்படைக்கு பழைய உரையாசிரியர்கள் பலர் எழுதியிருப்பதை உறுதி
செய்கிறது. இதற்கு முன்னதாகத். ‘திருமுருகாற்றுப்படை
மூலமும், பரிமேலழகர் உரையும், கோ.வடிவேலு ரெட்டியாரவர்களால் 1924ஆம் ஆண்டு வெளியிட்ட
பதிப்பு திருமுருகாற்றுப்படைக்கு வந்த பரிமேலழகர் முதல் உரைப்பதிப்பாக அமைகிறது.
திருமுருகாற்றுப்படைக்கு நச்சினார்க்கினியர் (கி.பி.14),
உரையாசிரியர் (கி.பி.15),
பரிமேலழகர் (கி.பி.13)
கவிப்பெருமாள், பரிதியார் (கி.பி.15) ஆகியோரின் உரைகள் அனைத்தும்
20ஆம் நூற்றாண்டில் பதிப்பாக்கம் பெற நச்சினார்க்கினியர்
உரைமட்டும் 19ஆம் நூற்றாண்டில் பல முறை
பதிப்பிக்கப்பட்டிருக்கிறது.
1834
இல் திருமுருகாற்றுப்படையினைத் திரு சரவணப்பெருமாளையர் அவர்கள் பதிப்பித்து வெளியிட்டார். 1853 இல் பத்துப்பாட்டின்
முதல் பாடலான திருமுருகாற்றுப்படையை நச்சினார்க்கினியர் உரையை
முதற்பதிப்பாக வெளியிட்ட ஆறுமுக நாவலர் 1947 ஆம் ஆண்டு 16 ஆம் பதிப்பினை வெளியிடுகிறார். தனது
திருக்குறள் பதிப்பில் ‘எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம்’ எனத் தொடங்கும் குறளுக்கு உரையெழுதும்போது அடிக்குறிப்பில் ‘குரவர் தப்பிய கொடுமை யோர்க்கும்’ எனத்
தொடங்கும் புறநானூற்றுப் பாடலைக் குறிப்பிடுகிறார். இவ்வாறு சங்க இலக்கிய புரிதலிருந்தும்
சங்கப்பதிப்பு முயற்சியில் ஆர்வம் காட்டாத்து அவருக்கிருந்த சைவப்பற்றினை
விளக்கும்.
பத்துப்பாட்டில் தனித்தனியாகவும் சில நூல்களை உரையாசிரியர்கள் வெளியிட்டுள்ளனர். திருமுருகாற்றுப்படையினை வெளியிட்ட உரையாசிரியர்களுடைய காலநிரல் வருமாறு:
1. திருமுருகாற்றுப்படை
மூலபாடம்,சரவணப்பெருமாளையர், கல்விவிளக்கவச்சுக்கூடம்,
சய ஆண்டு ஆவணி மாதம் (1834, 1894)
2. திருமுருகாற்றுப்படை நச்சினார்க்கினியருரையுடன், ஆறுமுகநாவலர், வித்தியானு பாலனயந்திரசாலை அச்சுக் கூடம், சென்னை,
பிரமாதிச ஐப்பசி (1853)
3. திருமுருகாற்றுப்படை சரவணப்பெருமாளையர் விக்டோரியா அச்சுக்கூடம் சென்னை 1902
4. திருமுருகாற்றுப்படை சுப்பராய முதலியார் பாரதி விலாச அச்சுக்கூடம், பரிதாபி(1912)
5. திருமுருகாற்றுப்படை
மூலம் அ.மகாதேவ செட்டியார் ஸ்ரீசாது இரத்தினசற்குரு புஸ்தகசாலை சென்னை 1924
6. திருமுருகாற்றுப்படை
சிற்றாராய்ச்சி எம்.ஆறுமுகம்பிள்ளை 1927
7. திருமுருகாற்றுப்படை சு.அருளம்பலவாணர் யாழ்ப்பாணம் 1937
8. திருமுருகாற்றுப்படை
மூலமும் பொருட்சுருக்கமும் பதவுரையும் குறிப்பும் தை . ஆ. கனகசபாபதி முதலியார் கே. பழனியாண்டிப்பிள்ளை கம்பெனி சென்னை 1 1937
9. திருமுருகாற்றுப்படை
மூலமும் உரையும் எஸ்.வையாபுரிப்பிள்ளை சைவசித்தாந்த மகாசமாஜம், சென்னை, IV 1946
10. திருமுருகாற்றுப்படை
(வழிகாட்டி) கி.வா.ஜகந்நாதன் அல்லயன்ஸ் கம்பெனி சென்னை, 1947
11. திருமுருகாற்றுப்படை ஆறுமுகநாவலர் விக்டோரியா
அச்சுக்கூடம் 1917, மறுபதிப்பு 1947
12. திருமுருகாற்றுப்படை
ஆராய்ச்சியுரையுடன் வை.மு. கோபாலகிருஷ்ணமாசாரியார் ஆனந்த பார்வதி அச்சகம், சென்னை 1951
13. திருமுருகாற்றுப்படை பொ.வே.சோமசுந்தரனார் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் சென்னை, I 1955
14. திருமுருகாற்றுப்படை
உரைக்கொத்து தொகுப்பு கே.எம்.
வேங்கடராமைய்யா திருப்பனந்தாள்
காசிமடம், I 1959
15. உதயசூரியன் புலியூர்க்கேசிகன் மல்லிகைப் பதிப்பகம்,
தியாகராய
நகர், சென்னை, I 1960
16. திருமுருகாற்றுப்படை மு.ரா.சாமி
மூவர்
பதிப்பகம், காரைக்குடி, 1966
17. திருமுருகாற்றுப்படை
மூலமும் தெளிவுரையும் இரா. இராதாகிருஷ்ணன் வள்ளலார் ஞானசபை,
புதுக்கோட்டை
IND
18.
திருமுருகாற்றுப்படை விளக்கம் கி.வா.ஜகந்நாதன் அமுத
நிலையம், சென்னை, 1970
அறம்பொருள் இன்பம் வீடு அடைதல் நூற்பயன் என்பதற்கிணங்க உரையாசிரியர்கள் நூலை தேர்வு செய்திருக்கின்றனர். வீடுபேறு அடைதற்கு திருமுருகாற்றுப்படையின் வாசிப்பு அமையும் என நம்பினர், அதாவது அறம்பொருள் இன்பம் பயில திருக்குறளும், வீடுபெற திருமுருகாற்றுப் படையும் துணை செய்யும் என்பதே அவர்களின் திண்ணமாக இருந்தது.
‘திருமுருகாற்றுப்படை என்பதற்குச் சிந்தனையும் மொழியும் செல்லா நிலைமைத்தாய அந்தமில் இன்பத்து அறிவில் வீடுபெறுவான் அமைந்தான் ஓர் இரவலனை அவ்வாறு வீடுபெற்றான் ஒருவன் முருகனுழை ஆற்றுப்படுத்தல் எனப் பொருள் விவரிக்க’ என பரிமேலழகர் குறிப்பிடுவது இக்கருத்திற்கு அரணாகின்றது.
”இதே வீடு பேற்றிற்காகவே திருமுருகாற்றுப்படை பதிப்பாசிரியர்களும்
பதிப்பகத்தார்களும் முயன்றிருக்கின்றனர். திருக்குறளினையும்
தாண்டிய ஒரு கருத்தாக்கத்தினை உரையாசிரி யர்கள் திருமுருகாற்றுப்படைக்கு
உருவாக்கியிருப்பது கவனிக்க வேண்டிய ஒன்றாகும். ஒரு பனுவலின்
வாசிப்பு மரபு என்பதினூடாக செயல்படும் வைதீகச் செயல்பாடு கவனிக்கத்தக்கதாகிறது” என்னும் கா.அய்யப்பனின் கூற்றினைக் கவனத்தில் கொள்ள வேண்டும். (தமிழ்ப்
பதிப்பு வரலாறு : திருமுருகாற்றுப்படை)
நிறைவுரை
தமிழ் நூல்கள் பதிப்பு வரலாறானது ஏறத்தாழ இருநுறு ஆண்டு கால வரையறைக்குட்பட்ட்து. ஐரோப்பியர் தமது நிர்வாக வசதிக்காக தந்த அச்சுமுறை பதிப்பு முன்னோடிகளின் முயற்சியால் பழைய சுவடிகளில் உள்ள புலமைச் செல்வத்தை மீட்டுருவாக்கம் செய்வதற்கு வலிகோலியது. புதிய சிந்தனைகளுக்குக் களங்களாக விளங்கும் பழம்பதிப்புகள் பயன்பாடும்பெரிதாகும்.
தமிழ் நூல்கள் பதிப்பு வரலாறானது ஏறத்தாழ இருநுறு ஆண்டு கால வரையறைக்குட்பட்ட்து. ஐரோப்பியர் தமது நிர்வாக வசதிக்காக தந்த அச்சுமுறை பதிப்பு முன்னோடிகளின் முயற்சியால் பழைய சுவடிகளில் உள்ள புலமைச் செல்வத்தை மீட்டுருவாக்கம் செய்வதற்கு வலிகோலியது. புதிய சிந்தனைகளுக்குக் களங்களாக விளங்கும் பழம்பதிப்புகள் பயன்பாடும்பெரிதாகும்.
Comments