திருச்சி ஜமால் முகமது கல்லூரி செம்மொழிக் கருத்தரங்கில் வாசிக்கப்பட்டது.
சங்க இலக்கியத்தில் அகம்,புறம் என்னும் இரு திணைகளிலும் ஊர்
என்னும் கருப்பொருள் ஆளப்பெற்றுள்ளது. அகப்பாடல்களில் புலவர்களின் சொந்த ஊர்கள், தலைவிக்கு உவமையாக
அமைந்த ஊர்கள், மற்றும் ஆதரித்த
மன்னர்களின் வள்ளல்களின் ஊர்கள் என்றும், புறப்பாடல்களாக ஊர்கள் இடம்பெறும்போது மன்னர்கள் அரசாட்சி
செய்யும் ஊர்கள், அவனது எல்கைக்கு
உட்பட்ட ஊர்கள், பகைவரை வென்ற
ஊர்கள், மற்றும்
வரலாற்று அடிப்படையில் இடம்பெறும் ஊர்கள் என்றும் அமைகின்றன.
ஊர்ப்புனைவின் வழிகாட்டியாய்த் திகழ்ந்தவர் அம்மூவன். இவர் தொண்டி என்னும்
ஊரினைச் சுட்டி ஐங்குறுநூற்றில் தனிப்பத்தினை அமைத்தவர். அவர்தம் புலநெறி
வழக்கைத் தழுவித் தனிநூல் பாடியவர் கடியலூர் உருத்திரங்கண்ணனாரும் மாங்குடிமருதனாரும் ஆவர்.
தொண்டிப்பத்து, பட்டினப்பாலை, மதுரைக்காஞ்சி ஆகிய
மூன்றும் ஒர் ஊரைப் புனையும் புனைவாக உள்ளன. பத்துப்பாட்டுத் தொகுப்பில் காலத்தால் பின்னதாகக்
கருதப்படும் திருமுருகாற்றுப்படை இந்த அடிப்படையில் ஐந்து ஊர்களை இணைத்து ஒரு பாட்டுடைத்தலைவனக்
கொண்டு பாடுகிறது. இம்மரபு பல
ஊர்களைப் பிணைத்துப் பாடப்பட்ட சிறுபாணாற்றுப்படையின் தொடர்ச்சியாகக் கருதவேண்டும். மேலும், சங்க இலக்கியத்தில்
பெயர் சுட்டிய ஊர்ப்புனைவுகளில் இயற்கை புனைவுப்பகுதி குறைவு. ஊர்ப்பெயர் சுட்டாது பாடுகின்ற குன்றப்புனைவுகளில்தான் இயற்கை புனைவுப்பகுதி மிகுதி.
ஆற்றுப்படை என்னும் புறத்துறை
ஆற்றுப்படுத்தலைப் பேசுவது, அத்துறையைத் தனிநூலாக விளக்கும்போது
ஊர்ப்புனைவு
அமைகின்றது. தமிழகத்திலுள்ள
நிலங்களைப் புனையும் போது ஆற்றுப்படை நூலாசிரியர், நானில வருணனையாகப் புனைவர். ஓரே நூலில் நான்கு திணைகளும் நான்கு ஊர்களாகவோ அதற்கு
மேற்பட்டனவாகவோ புனைவது இயல்பு.
இவற்றில்
ஊர்களின் பெயர் குறிப்பிடப்பட்டோ குறிப்பிடப்படாமலோ இருக்கும். ஆற்றுப்படை நூல்களில்
காணப்படும் ஊர்ப்புனைவுகளைத் தலைவன் அரசாட்சி செய்யும் ஊர்ப்புனைவுகள், அடையாளம் காட்டும் ஊர்ப்புனைவுகள், ஒப்புமையாக அமைந்த ஊர்ப்புனைவுகள், வழியிடை ஊர்ப்புனைவுகள், பெயர்சுட்டாப்
புனைவுகள் என்ற அடிப்படையில் பாகுபடுத்த இயலும்.
தலைவன்
அரசாட்சி செய்யும் ஊர்கள்
பாட்டுடைத்தலைவன் அரசாட்சி
செய்யும் ஊர்களைப் பற்றி குறிப்பிடும்போது அரசனின் இயல்பு, மாந்தரின் செயல்கள், பொருள் வளங்கள், காவல் கடுமை, விழவுமலி ஊர்களாகப்
புலவர்களால் சித்திரிக்கப்படுகின்றன. திருமுருகாற்றுப்படை பாட்டுடைத்தலைவன்
முருகனாக அமைவதால் அறுபடைவீட்டில் முருகன் வீற்றிருக்கும் தன்மை பேசப்படுகிறது. முருகனின் படைவீடுகளான திருப்பரங்குன்றம் திருச்சீரலைவாய், திருவாவினன்குடி, திருவேரகம், பழமுதிர்ச்சோலை மற்றும்
குமரன் உறைந்துள்ள குன்றுகள் தோறும் நடைபெறும் நிகழ்வுகள் பேசப்படுகின்றன.
குன்றம்-குன்று
குன்றம்,குன்று,மலை என்னும் பொருண்மையுடையது. குன்றம் என்ற சொல் வேங்கடமலையினையும் குறிக்க ஆளப்பெற்றுள்ளது. ஈண்டு, திருப்பரங்குன்றினைக் குறிக்கிறது.மதுரையின் மேற்குப்புறத்தே,
இருஞ்சேற் றகல்வயல் விரிந்துவாய் அவிழ்த்த
முட்டாள் தாமரை துஞ்சி
வைகறைக்
கட்கமழ் நெய்தல் ஊதி எற்படக்
கண்போல் மலர்ந்த காமரு சுனைமலர் (திருமுருகு. 72-75)
சென்று
அழகிய சிறகுகளையுடைய வண்டுக்கூட்டமானது ஆரவாரித்து நிற்கும் திருப்பரங்குன்றத்தில் உறைபவன் என்று
குறிப்பிடுவதனால் அறிகின்றோம்.
அலைவாய்
மருதநிலத்து முருகனைக்
குறிப்பிட்ட புலவர் அடுத்து நெய்தல் நிலத்து உறை முருகனைப் புனையும்போது பல்வேறு
ஒலிகளைக் கொண்டு ஊர்ப்புனைவினை
அமைக்கின்றார். தேவதுந்துபி, கொம்புகள்,
வெண்சங்குகள், முரசு ஆகிய
இசைக்கருவிகள் இசைக்கப்பெற மயில் அகவுறும்
ஓசையுடன் அலைவாயிலில் முருகன் வீற்றிருப்பான்
என்பர்.
உலகம் புகழ்ந்த ஓங்குயர்
விழுச்சீர்
அலைவாய் சேறலும் நிலைஇய பண்பே (திருமுருகு. 124-125)
என்பது
பாடலடிகள் தரும் செய்தியாகும்.
திருவாவினன்குடி
முனிவர் முற்புக, தேவர்கள் மகளிருடன்
விளங்க, திருமாலும் உருத்திரனும், இந்திரனும் முப்பத்துமூவரும், பதினெண்கணத்தாரும் வந்துகாண,
தாவில் கொள்கை
மடந்தையோடு சின்னாள்
ஆவினன்குடி அசைதலும்
உரியன் ( திருமுருகு.175-176)
என்பர். ஈண்டு ஆவினன்குடி என்று பழனி மலை சுட்டப்படுகிறது.
ஏரகம்
இருமூன்று எய்திய இயல்பினின்
வழாஅது
இருவர் சுட்டிய பல்வேறு தொல்குடி
………………………………………………………………………………………………………………..
ஏரகத்து உறைதலும்
உரியன் (திருமுருகு. 177-189)
ஏரகத்தினைச் சுவாமிமலை அன்று என்பர். ஏரகத்து முருகன்
கோயிலில் 48 ஆண்டு
பிரம்மச்சரியம் விரதம் காத்த வேதியர்
மந்திரங்கள் கூற ஈர உடையணிந்த அருச்சகர்
முருகனுக்குரிய ஆறெழுத்து மந்திரத்தைக்
கூறி அருச்சனை செய்யப்பட்டது என்பது நூல் தரும் செய்தி. ஏரகம் குறித்த
திருமுருகாற்றுப்படை தரும் செய்தியும் நச்சினார்க்கினியர், எரகம் மலைநாடகத்தொரு திருப்பதி
என்று கூறுவதையும் கொண்டு,
மேற்கு
மலைத்தொடரின் மேற்கு பக்கத்து மலைப்பகுதியைச் சார்ந்த குமாரசேத்திரம் அல்லது சுப்ரமண்ய ஷேத்திரம் என்ற சிற்றூர்
உள்ளது, அங்கு
நடைபெறும் பூசை முறை மேற்குறிப்பிட்ட
செய்திகளுடன் ஒத்து காணப்படுகின்றது என்று இலக்கியத்தில் ஊர்ப்பெயர்கள் என்னும் தனது நூலுள் குறிக்கின்றார் ஆளவந்தார்.
கிடங்கில்
நடுநாட்டிலே ஒய்மாநாட்டு நல்லியக்கோடனின் ஆட்சியில்
இருந்த ஒரூர். திண்டிவனம் நகரத்தின்
அருகே உள்ளது. கிடங்கல் என்று இப்போது
அழைக்கப்பெறுகிறது. கிளைமலர்ப் படப்பைக் கிடங்கில்
கோமான் என்னுமடிகளில் கொத்திலெழுந்த பூக்களையுடயவாகிய
தோட்டங்களையுடைய கிடங்கில் என்னும் ஊர்க்கு அரசன் என்று உரையாசிரியர் விளக்கம்
தருவர்.(சிறுபாண்.160)
சாலியூர்(நெல்லின் ஊர்)
சீர்சாண் உயர் நெல்லின்
ஊர் கொண்ட என்னுமடிகளில் (மதுரை.கா.87-88) தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் நெல்லின் உயர் கொற்றவ என்று மதுரைக்காஞ்சியில்
கூறப்பெற்றுள்ளான். இதற்குப்
பொருள் எழுதிய நச்சினார்க்கினியர்
நெல்லின் பெயரைப் பெற்ற சாலியூரைக் கொண்ட
உயர்ந்த பெற்றிமை உடையவன் என்பர்.அவரே நெல்லின் என்பதிலுள்ள இன்னை அசையாக்கி நெல்லூர் என்பாரும் உளர் என்றார்.(ப- 65)
நெல்லூர்
அல்லது சாலியூர் என்று சங்க
இலக்கியத்தில் கூறப்பெற்றுள்ள இவ்வூர் ஆந்திர நாட்டு நெல்லூர் என்பதில் ஐயமன்று. அன்று தமிழக எல்லை
அவ்வூர் வரை விரிவடைந்திருந்தது.
கரிகால் பெருவளத்தான் காலத்தில்
அவனது ஆளுகைக்கு உட்பட்ட பகுதியாகச் சாலி இருந்துள்ளது.
கூனி குத்து வாய்நெல்
அரிந்து
சூர் கோடாதல்
பிறக்கா நாற்கொண்
சாலி நெல்லின் சிறைகொள்வேலி
ஆயிரம் விளையுட் டாகக்
காவிரி புரக்கும்
நாடு கிழவோனே (பெரும்பாண்.244-248)
என்னுமடிகள் இதனை
வலியுறுத்தும்.
வெண்ணி
கரிகாலன் பெற
வெற்றியைக் குறிப்பதன் மூலம் வெண்ணி
என்னும் ஊர் இடம் பெறுகிறது.
வெண்ணி - வெறுந்தரை அல்லது மணற்பாங்கான தரை என்று பொருள்படும். இவ்வூர் திருவாரூர்
மாவட்டம் மன்னார்குடி அருகில் இன்று கோயில்வெண்ணி என்று அழைக்கப்பெறும் ஊராகும். இரும்பனற் போல்வது (பொருநர்.143-48) என்னுமடிகளில் கரிகாலனின் வெற்றி பதிவு செய்யுமிடத்தில் வெண்ணி என்னும் ஊர்
சுட்டப்படுகிறது. ஆற்றுப்படை
நூல்களில் இந்நூலொன்றே போர்வெற்றிபெற்ற
ஊரினைக் குறித்துப் புனைகிறது.
அடையாளம்
காட்டும் ஊர்கள் (LANDMARK)
கூடல்.
சங்க
இலக்கியங்களில் ஆலவாய், நான்மாடக்கூடல், மதுரை என்றும்
குறிக்கப்பெற்றுள்ளது.
கூடல்
என்பது கூடி இருத்தல் என்னும் பொருளில் புலவர் கூடித் தமிழராய்ந்தமை மற்றும் மாடங்களுடன் கூடியது என்றும் பொருளுரைப்பர்.
திருமுருகாற்றுப்படையில்
கூடலானது பரங்குன்றினை அடையாளம்(லந்dமர்க்) காட்டுவதற்காகச் சுட்டப்படுகிறது மாநகரின் வாயிலில் நெடுங்கொடி நிறுவப்பட்டிருக்கிறது. கொடியில் பாவையும் பந்தும் தொங்க விடப்பட்டுள்ளன. நகரவாயில் பகைவர்
அச்சமின்றித் திறந்தே கிடக்கின்றது.திருமகள் வீற்றிருக்கும் அங்காடித்தெரு,மாடங்கள் மிகுந்த தெருக்கள் உடையது
மதுரை.
திரு விற்றிருந்த தீதுதீர்
நியமத்து
மாடமலி மறுகிற் கூடல் குடவயின் (திருமுருகு.70-71)
என்பது
புனைவுச்செய்தியாகும்.
இலங்கை
சிறுபாணாற்றுப்படை
ஆசிரியரும் நல்லியக்கோடனின் மாவிலங்கையைக்
குறிக்கும்போது இலங்கை மாநகருடன் ஒப்பிடுகின்றார். இப்புனைவில் சுரபுன்னையும் அகிலையும் சந்தனத்தையும்
நீராடும் மகளிருக்குத் தெப்பமாக நீர் கொணர்ந்து தரும் அழிதலில்லாத முறைமையினுடைய
பழம் புகழையுடைய பெரிய இலங்கை என்று இலங்கை மாநகரம் பேசப்படுகிறது. இப்புனைவில் மாவிலங்கையின் தொன்மை சுட்டப் புலவர்
இலங்கையைத் தொடர்புபடுத்திப் புனைகின்றார். சிறுபாண் (117-120)
உறுபுலி துப்பின்
ஓவியர் பெருமகன்
களிற்றுத் தழும்பு இருந்த கழல் துயங்கு திருந்துஅடி
பிடிக்களிறும் சிதறும் பெயல் மழைத்தடக்கை
பல் இயக் கோடியர் புரவலன் பேர் இடை (சிறுபாண்.122-126)
வழியிடைப்புனைவுகள்
ஆற்றுப்படை நூல்களில் வள்ளல் வாழும்
ஊருக்குச் செல்லும் வழியிடையே
காணப்படும்
ஊர்கள், வழிபாட்டுத்தலம்
ஆகியன வழியிடைப்புனைவுகள் என்னும்
இத்தலைப்பில் இடம்பெறுகின்றன. எயிற்பட்டினம், வேலூர், கிடங்கில் என்னும்
மூன்று ஊர்ப்பெயர்கமைச் சிறுபாணாற்றுப்படை
ஒன்றே குறிக்கின்றது. இவை யாவும் ஊரை
வருணித்துப் புனைவினை விரித்துரைக்கின்றன. வழிபடுத்துவோன் ஊரினைச்
சுட்டும் போது அவ்வூரில் கிடைக்கப்பெறும் உணவினை ஆசிரியர் விதந்தோதுகின்றார்.
எயிற்பட்டினம்
நெய்தல் நிலக் கடற்கரை ஊராகும். மாவிலங்கை செல்லும்
வழியில் அமைந்துள்ளது.
தாழை, செருந்தி, கழிமுள்ளி, புன்னைமரங்கள் பூத்து
நிற்க அந்நெய்தல் நிலத்தின் வழியே நீலமணிபோலும்
நிறமுடைய உப்பங்கழி சூழ்ந்த ஊர்களையுடையது.
பாடல் சான்ற நெய்தல் நெடுவழி
மணிநீர் வைப்பு
மதிலொடு பெயரிய
பனிநீர்ப் படுவிற் பட்டினம் படரின் (சிறுபாண்.151-153)
அவ்வூர்
நுளைச்சியர் தேறலைப் பரவருக்கு ஊட்ட நீயிரும் மகிழ்ந்து கிடங்கில் கோமானைப் பாடினால்
உலர்ந்த சுட்ட
குழல்மீனை உணவாகத் தருவர்.
வேலூர்
தென் ஆர்க்காடு
மாவட்டம் திண்டிவனம் வட்டம் கிளியனூருக்கு அருகில் உள்ளது ஒய்மாநாட்டு வேலூர். இப்போது உப்பு வேலூர் என்றழைக்கப்படுகிறது. நல்லியக்கோடன் தன் பகை
மிகுதிக்கு அஞ்சி முருகனை வழிபட்டவழி அவன்
இக்கேணியிற் பூவை வாங்கிப் பகைவரை
எறியென்று கனவிற்கூறி அதிற் பூவைத் தன்
வேலாக நிருமித்தான் என்பர் நச்சர்( ப.
). எயிற்பட்டினம் தொடர்ந்து
வேலூர் எய்தின்,
எயிற்றியர் அட்ட இன்புளி வெஞ்சோறு
தேமா மேனி சில்வளை யாயமொடு
ஆமான் சூட்டின் அமைவரப் பெறுகுவீர் (சிறுபாண்.175-177)
என்றுரைப்பர்.
ஆமூர்
அழகிய
குளிர்ந்த கிடங்கினையும் அரிய காவலையும் அகன்ற அகங்களையும் நிறைந்த அந்தணர்களையும் உடையது ஆமூர் என்பது சிறுபாணாற்றுப்படை. வேலூரிலிருந்து கிடங்கிலை நோக்கிச் செல்லும் வழியில்,.
மருதஞ் சான்ற மருதத் தண்பணை
அந்தணர் அருகா அருங்கடி வியனகர்
அந்தண் கிடங்கின்அவன் ஆமூர் எய்தின் (சிறுபாண்.186-188)
என்னுமடிகளில் மருதநிலமாக ஆமூர்
சித்திரிக்கப்படுகின்றது.
அவ்வாமூர் எய்தினால் வெள்ளிய சோற்றை நண்டினது கலவையோடு உழவர்
தங்கை தருவாள்.
வழிபாட்டுத்தலம்
வழிபாட்டுத்தலங்கள்
திருமுருகாற்றுப்படை பாட்டுடைத்தலைவன்
முருகனாக அமைவதால் அந்நூலுள் குறிக்கப்பெற்ற முருகன் உறைவிடங்களைத் தலைவன்
அரசாட்சி செய்யும் ஊராக் கொண்டு ஆண்டு உரைக்கப்பெற்றுள்ளது. ஈண்டு
பெரும்பாணாற்றுப்படையில் திருவெஃகா
என்னும் தலம் திருமால் உறைந்துள்ள தலமாகவும் வழிச்செல்வோர்
தங்குமிடமாகவும் கூறப்பெற்றுள்ளது.
திருவெஃகா
நீர்பெயற்று என்னும்
கடற்கரை ஊரினைக் கடந்தால் திருமால் பள்ளிகொண்டருளும் திருவெஃகா என்னும் ஊர் அடைவீர். அங்கே இன்னிழல்
தரும் இளமரக்கா உண்டு. அவ்விடத்தே பாண்மகளிருடன் பகற்பொழுதில்
தங்கியிருந்து,
மடவரல் மகளிரொடு பகல்விளை யாடிப்
பொய்யா மரபிற் பூமலி பெருந்துறைச்
செவ்விகொள் பவரோ டசைஇ யவ்வயின்
அருந்திறற் கடவுள்
வாழ்த்தி (பெரும்பாண். 387-391)
செல்லுங்கள்
என்று வழிப்படுத்துவோன் கூற்றாக
அமைக்கின்றார் ஆசிரியர்.
ஒப்புமையாக
ஊர்கள்
மூவேந்தர்களின்
தலநகரங்களான கொற்கை, மதுரை, வஞ்சி, உறந்தை என்னும்
நான்கு ஊர்களும் நல்லியக்கோடன் தரும்
கொடைக்கு ஈடாகாது என்று கூற வந்த புலவர் அந்நான்கு ஊர்ச் சிறப்புகளையும் விரித்துரைக்கின்றார். மேலும், கடையேழு
வள்ளல்களுக்குப் பின்னர் அக்கொடை மரபினை நல்லியக்கோடனிடம்
காண்பதாகக் கூறுமுகத்தான் கடையேழு வள்ளல்களில் பெருங்கல் நாடன் பேகன் என்றும்(அடி-87) பறம்பிற் கோமான் பாரி(அடிகள்.90-91)
என்றும்
இருவரின் மலைகளும் குறிக்கப்பெறுகின்றன.
வஞ்சி
கொழுவிய மீன்கள் துணியும்படி நடந்து, செங்கழுநீர் மலரை மேய்ந்த
எருமை மிளகுக்கொடி படர்ந்த பலவின் நிழலில் காட்டு மல்லிகைக் கொடியாகிய
படுக்கையில் துயிலும் என்று புனைவர். குடபுலங் காவலன் மருமான் உறையும் இத்தகைய வளத்தையுடைய வஞ்சியும் வறிதே என்பார்
ஆசிரியர்.
கொற்கை
மந்தியானது,
தோள்புறம் மறைக்கும் நல்கூர் நுசுப்பின்
உளரியல் ஐம்பால் உமட்டியர் ஈன்ற
கிளர்பூண் புதல்வரொடு கிலிகிலி ஆடும்
தத்துநீர் வரைப்பின் கொற்கைக் கோமான் (சிறுபாண்.59-63)
ஆகியவனும்
தென்புலங்காவலன் மருமானும் ஆகிய
செழியனின் மதுரை தரும் கொடையும் குறைவே என்று சுட்டுகிறார் ஆசிரியர்.இதனை,
மதுரை
கண் ஆர்
கண்ணி கடுந்தேர்ச் செழியன்
தமிழ் நிலைபெற்ற தாங்கு அருமரபின்
மகிழ்நனை மறுகின் மதுரையும் வறிதே (சிறுபாண்.65-67)
என்னும்
அடிகளால் ஆசிரியர் விரித்துரைப்பர்.
உறந்தை
உறந்தை
சுட்டப்பெறும்போது அவ்வூரின் மருதவளனும்
அவ்வூரினை ஆள்கின்ற செம்பியன் திறமும்
கூறப்பெறுகின்றன. ’காமருந் தும்பி காமரஞ் செப்பும் தண்பணை
தழீஇய தளரா இருக்கை’ என்றும் ’நாடா நல்லிசை நற்றேர்ச்
செம்பியன் ஓடா பூட்கை உறந்தை’(சிறுபாண்.82-83)
என்றும்
உறந்தையைப் புனைந்து அத்தகைய உறந்தையும் வறிதே என்பார்.
நீர்ப்பெயற்று
கடல் நீர் உட்பெய்தலைக் கொண்டதாகிய நிலம் என்று பொருள்படும். அஃதாவது உப்பங்கழியை
உடைய நிலப்பகுதி. மாமல்லபுரம் அடுத்துள்ள கழிவெளிப்பகுதி நீர்ப்பெயற்று என்னும்
பெயருடைய ஊராக இருக்கலாம் என்பது பொருத்தம்.(ப.-150). கடல் மல்லைத் தலசயனம் என்று வைணவர் வழங்குவர்.
பெரும்பாணாற்றுப்படை
ஆசிரியர் காஞ்சி நகரம் செல்லும் வழியே அமைந்த கடற்கரை ஊராக நீர்ப்பெயற்று என்னும் ஊரைக் குறிப்பர். கடற்கரையில்
குவிந்துள்ள குதிரைகள்,
வடநாட்டு
பொருட்கள், மரக்கலங்கள், பண்டகச்சாலை, பரதவர் தெருக்கள், வணிகமகளிர் பந்தடித்தும் கழங்காடியும் இருப்பர். அக்கடற்கரைப்பட்டினத்தில் தங்கினால்,
நென்மா வல்சி தீற்றிப் பன்னாள்
குழிநிறுத் தோம்பிய குறுந்தா ளேற்றைக்
கொழுநிணத் தடியொடு கூர்நறாப் பெறுகுவீர் (பெரும்பாண். 343-345)
என்றுரைப்பர்.
பெயர்சுட்டாப் புனைவுகள்
நனந்தலை மூதூர், பழவிறல் மூதூர், மல்லலூர், ஊரண்மை சுட்டும் ஒலிப்புனைவு, என்னும்
அடிப்படையில் பெயர்சுட்டாப் புனைவுகளைக் காணுதற்கியலும்.
நனந்தலை மூதூர்
நனந்தலை என்ற சொல்
ஊரின் பரப்பைக் காட்ட இவ்வடையைப் பயன்படுத்துகின்றனர். நனந்தலை யகலிரு வானத்து (பெரும்.291-92)
இச்சொல்
ஊருக்கு அடையாகவில்லை எனினும் இடத்துக்கும் மக்களுக்கும் பெயருக்கும் அடையாக
வந்துள்ளது என்பர்.மேலும், மக்கள் வாழ்தற்கு வேண்டிய அகலிடமுடையதும் நெல்
முதலிய பொருள் வருவாய் மிக்கதும் குடிவளம்
பெருகியதும் ஆகிய ஊரினைக் குறிக்க அறாஅ யாணர் அகன்றலைப் பேரூர் என்ற
சொற்றொடரினை ஆள்கின்றார் ஆசிரியர் (பொ.வே.சோமசுந்தரன் உரை,ப.26).
பழவிறல் மூதூர்
சங்கநூல்கள் ஊரின் பழமையைக்
காட்டிட மூதூர் என்று அடைபெய்து பேசுகின்றன. இந்த அடைப்பெயருக்கு முன்னர்ப் பல்வேறு அடைகள் பயிலுகின்றன. இத்தகைய அடைகளுள் ஒன்று பழவிறல்
என்பதாகும். பழமையான
வெற்றியையுடைய மூதூர் என்பது இந்த அடையின்
விளக்கமாகும். பழவிறல்மூதூர் என்ற தொடர்
பெரும்பாணாற்றுப்படை மற்றும் மலைபடுகடாம்
என்னும் இருநூல்களில் இடம்பெறுகின்றது. இருவகை நிலைகளில் இவ்வூர்ப்புனைவு கையாளப்பெறுகிறது. ஒன்று ஊரை விளக்குவது; இன்னொன்று இடத்தை
விளக்குவது. ஆனால்
பத்துப்பாட்டில், பழவிறல் என்னும் இவ் அடை ஊரை உணர்த்துவதாக அமைகின்றது. பெரும்பாணாற்றுப்படையில், கச்சி மாநகரில்
வீற்றிருக்கும் இளந்திரையினைச் சுட்டவந்த கடியலூர் உருத்திரங்கண்ணனார்,
விழவுமேம் பட்ட பழவிறல் மூதூர் (பெரும்பாண். 411)
என்று
கச்சி மாநகரைச் சுட்டுவர். கச்சிமாநகர்ப் புனைவு
விரிவாக அமைகிறது. இதற்கு,
ஈண்டு விழவு மேம்பட்ட பழவிறன் மூதூர் என்றது திருவெஃகா
முதலாகப் பலவூர்களைத்
தன் சேரிகளாக்
கொண்ட
பேரூரை என்பது
பொருந்தும். பழவிறன் மூதூர்= பழமையாகவே விறலாற் சிறந்த பல்லூர்களுந் தோற்ற்ற்கு முன்னரே
தோன்றிய ஊர்க்ஷ் “நகரேஷு காஞ்சி” என்னும் வடமொழி
வழக்கால் இதன் சிறப்பும் பழமையுணரலாம்
என்று ரா.இராகவையங்கார் விரிவுரை எழுதுவர். பேராசிரியர் ரா.இராகவையங்கார் பழவிறல் மூதூருக்குத் தந்த விளக்கம்
அத்தொடரின் பொருளாழத்தையும் அகலத்தையும்
விளக்குவதாகிறது.
செங்கண்மா
இரணியமுட்டத்துப் பெருங்குன்றூர் பெருங்கெளசிகன் பல்குன்ற கோட்டத்துச் செங்கண் மாத்து வேள் நன்னன் சேய் நன்னனைப் பாடிய மலைபடுகடாம் என்ற தொடர் நன்னனுக்குரியது. நன்னன் சேய் நன்னன் செங்கண்மா தலைநகராகக்
கொண்டு பல்குன்ற நாட்டை ஆண்டான். செங்கம் என்று தற்போது
வழங்கப்படும் ஊர் நன்னன் ஆண்டது. ஊரைச்சொல்லி – ஊர் அண்மைத்து என்று அந்நூல் இயம்புகிறது; பாட்டில் ஊர்ப்பெயரே இடம்பெறவில்லை
எனினும் செங்கண்மா என்பது அறிஞர் முடிபு.. நன்னனுடைய ஊரைப் பத்து
அடிகளில்,
நிதியந் துஞ்சு நிவந்தோங்கு வரைப்பிற்
பதியெழு லறியாப் பழங்குடி கெழீஇ
வியலிடம் பெறாஅ விழுப்பெரு நியமத்து -
யாறெனக் கிடந்த தெருவிற் சாறென
இகழுநர் வெரூஉங் கவலை மறுகிற்
கடலெனக் காரென வொலிக்குஞ் சும்மையொடு
மலையென மழையென மாட மோங்கித்
துனிநீர் காதலி னினிதமர்ந் துறையும்
பனிவார் காவிற் பல்வண் டிமிரும்
நனிசேய்த் தன்றவன் பழவிறன் மூதூர் (மலை.478-487)
என்று
பாடுவர். இங்கு ஊர் ஆரவாரமிக்கது என்று குறிக்கச் சாறென(விழா) சுட்டுவர்.
ஊரின்
விழாக்கோலத்தைச் சுட்டிய ஆசிரியர் அவ்வூரின் வணிகவளத்தை விழு பெரு நியமத்து என்றும் உணர்த்துகின்றார். மலைபடுகடாம் ஆசிரியர் ஓசையான் அவ்வூரைப் புனைந்திருக்கின்றார். பழமை, வணிகம், விழாச் சிறப்புகளையுடைய
ஊர் நன்னனுடய ஊர் என்று காட்டப் பழவிறல் மூதூர் என்ற அடைத்தொடரைப் பயன்படுத்துவர். நன்னனுடைய ஊரைச் செயற்கை
வளத்தையே – வணிக வளத்தையே – புனைகிறார். இயற்கை அழகும் கவினும்
பாடலில் இடம்பெற்றில. மலைபடுகடாம்
புனைவிலிருந்து பெரும்பாணாற்றுப்படைப் புனைவு. வேறுபட்டதாகவும் இயற்கை சார்புடையதாகவும் திகழ்கிறது.
மல்லல் பேரூர்ப்
புனைவு
ஊரின்
வளத்தைக் காட்டும்முகனாக மல்லலூர்ப் புனைவு
அமைகிறது.
தொல்பசி யறியாத் துளங்கா விருக்கை
மல்லற் பேரூர்
மடியின் மடியா (பெரும்பாண். 253-54)
என்று
மருத நிலப் பேரூர் புனையப் பெறுகிறது. மேலும்,
மல்லல் மன்றத்து மதவிடை கெண்டி (பெரும்பாண்க்ஷ்143) என்று மன்றம் புனைவு
பெறுகிறது.
ஆற்றுப்படை நூல்களில் பாட்டுடைத்தலைவன் ஊர்கள் பெயர்
சுட்டப்பட்டும் மூதூர் என்று பெயர்
சுட்டப்படாமலும் வழங்கப்படுகின்றன.
வழியிடைப்புனைவாகச் சிறுபாணாற்றுப்படை
மூன்று ஊர்களைச் சுட்டுவது புனைவு மரபு மாற்றமாகும். புனைவுகளில் தலைவனின் ஊர்கள் நானிலவளம்
மிக்கது என்பதனால் அவ்வூரில்
வாழும் மக்களும் சிறந்த கொடைப்பண்புகளோடு
விளங்கினர் என்பதை விளக்க ஊர்ப்பெயர்கள் இடம்பெறலாயிற்று
Comments