seminarசூழலியல்
நோக்கில் புறநானூறு
முனைவர் சா.இரமேஷ், தமிழ் உதவிப் பேராசிரியர், அரசினர் கலைக் கல்லூரி (தன்), கும்பகோணம். 612
001
உலக மொழிகளில் தனிப்பெருஞ்
சிறப்பினைப் பெற்ற தமிழ்மொழியின் தனித்துவத்திற்குச் சங்க இலக்கியங்கள் பெரிதும் துணையாகின்றன.
இச்சங்க இலக்கியங்கள் பாடற் பின்னணிக்கு இயற்கை, பின்புலமாக அமைந்து காணப்படுகிறது.
இயற்கை என்பது ஒரு முழுமையான நிரந்தர இயல்பாகும். மனிதன் இயற்கையைச்
சார்ந்து உயிர் வாழ்கிறான்.அவன் தனது வாழ்க்கைத் தேவைகள் அனைத்தையும்
இயற்கையிலிருந்து எடுத்துக் கொள்கிறான்.இயற்கையை மனிதனின் அங்கம்
என்று அறிஞர் மார்க்ஸ் விளக்குகிறார்.(1)
சங்ககாலப் புலவர்கள் மேற்கூறிய அறிஞர் கூற்றினை முழுமையாக உணர்ந்திருந்தனர்
என்பதை அவர்தம் சங்கப் பாடல்கள் வாயிலாகப் அறியமுடிகிறது. சங்ககால மக்கள் இயற்கையைப்
போற்றிப் பேணிப் பாதுகாத்ததோடு நில்லாமல் பேணும் முறையினை உலகிற்குக் கற்றுக் கொடுக்கும்
பாங்கினையும் காண்கிறோம்.
இயற்கை : விளக்கம்.
இயற்கையின் கோலம் எண்ணிலடங்கா. காண்போர் கண்ணிலும் மனதிலும்
நிலைத்து பழந்தமிழ் இலக்கியங்களில் பரந்து காணக் கிடக்கின்றன. தமிழின் தொன்மை இலக்கண
நூலாகியத் தொல்காப்பியம், ‘இயற்கைப் பொருளை
இற்றெனக் கிளத்தல்’ (தொல்.கிளவி.நூ.எண்.19)
என்னும் நூற்பாவில் இயற்கை என்பதனை இயல்பு என்னும் பொருண்மையில் கையாளுகிறது. இந்நூற்பா
உரையில் சேனாவரையர் இயற்கைப் பொருள் என்பதற்கு தன்னியல்பில் திரியாது நின்ற பொருள்
(2) என்று விளக்கந் தருவர்.
மதுரைத் தமிழ்ப்
பேரகராதி இயற்கை என்ற சொல்லுக்கு சுபாவம்,
வழக்கம், இலக்கணம், நிலைமை, கொள்கை, முறைமை, ஏது, குணம், தகுதி, பாக்கியம், இயல்பு,
செயற்கைக்கு எதிரானவை என்ற பல பொருள்களைத் தருகிறது.(3)
பழந்தமிழர் வாழ்வில்
இன்றியமையாக் கூறாக இயற்கை இருந்தமையை இவ்வரையறை வாயிலாக உணர்கின்றோம். இன்றைய காலகட்டத்தில்
மனிதர்களிடம் காண்கின்ற சுற்றுச் சூழல் பற்றிய சிந்தனைகள் பழந்தமிழரிடத்தும் இருந்துள்ளன
என்பதை அக்கால இலக்கியங்கள் பகர்கின்றன.
பண்டைத் தமிழரின்
நிலம் பற்றிய பார்வை பரந்துபட்டதாக இருந்தது. முதற்பொருள், கருப்பொருள் என்று இருவகையாக
நிலத்தைப் பாகுபடுத்தியுள்ளனர். நிலம் போன்று ஞாயிறு இயக்கம், கோள்களின் இயக்கம், மழை
பற்றிய சிந்தனை, காற்று, அது இயங்கும் வான்வெளி குறித்த அவர்களின் பார்வைகளையும் செவ்வியல்
இலக்கியங்கள் தருகின்றன. அவ்வகையில் புறநானூறு காட்டும் சூழலியல் சிந்தனைகளைக் குறித்ததாக
இவ்வாய்வுப் பொருண்மை அமைகின்றது.
உலகம்- விளக்கம்
உலகம் என்பது நிலம்,
நெருப்பு, நீர், காற்று, வானம் ஆகிய ஐந்தும் உள்ளடக்கியது மட்டுமல்லாது இஃது இயற்கையின்
பாற்பட்டது என்பதைத் பழந்தமிழர் அறிந்திருந்தனர். இதனைத் தொல்காப்பியர்,
நிலம்தீ நீர்வளி விசும்போடு ஐந்தும்
கலந்த மயக்கம் உலகம் ஆதலின் (தொல்.பொருள்.1539)
என்னும் நூற்பாவில் இப்பூமியானது மேற்கூறப்பெற்ற ஐம்பெரும் பூதங்களையும்
உள்ளடக்கியது என்பர். இதனை அடியொற்றிச் சங்கப் புறநானூற்றுப் புலவர்,
இருமுந்நீர் குட்டமும்
வியல்ஞாலத்து அகலமும்
வளிவழங்கு திசையும்
வறிதுநிலைஇய காயமும் என்றாங்கு
அவை அளந்து அறியினும் (புறம்.20:1-5)
என்னும் பாடலடிகளில் அளக்க முடியா பண்புகளுக்குக் கடல், காற்று,
ஆகாயம் என்ற மூன்றினைக் குறிப்பர்.
உலகம் என்பது இவ்வைம்பெரும்
பூதங்களாகியது என்பதை மற்றொரு புலவர் தெளிவுற விளக்குகின்றார்.
மண்டிணிந்த நிலனும்
நிலனேந்திய விசும்பும்
விசும்புதைவருஉ வளியும்
வளித் தலைஇய தீயும்
தீ முரணிய நீருமென்றாங்கு
ஐம்பெரும் பூதத்து இயற்கை போல (புறம்.2:1-6)
என்னும் பாடலடிகளில் மண் திணிந்திருக்கும் நிலமும் நிலம் ஏந்தியிருக்கும்
ஆகாயமும், ஆகாயத்தின் வழி வரும் காற்றும், காற்றில் கலந்து வரும் தீயும், தீயின் முரணிய
நீரும் கலந்தது உலகம் என்றுரைப்பர்.
வானியலறிவு
பழந்தமிழர் இயற்கையைப்
போற்றினர் என்பது, அவர்கள் பஞ்சபூதங்களை வழிபட்டமையைக் கொண்டு உணரமுடிகிறது. குறிப்பாக
ஞாயிறு வழிபாடு தொன்மை வழிபாடாக இருந்து வந்துள்ளது. புறநானூற்றில் வானியல் தொடர்பான
செய்திகளில் கதிரவன் தோற்றம் இயங்கும் முறை ஆகியன பற்றிய குறிப்புகளைக் காண்கிறோம்.
செஞ்ஞாயிற்றுச்
செலவும்
அஞ்ஞாயிற்றுப்
பரிப்பும்
பரிப்புச்
சூழ்ந்த மண்டிலமும்
வளிதரு
திசையும்
வறிது
நிலைஇய காயமும் என்றுஇவை
சென்று
அளந்து அறிந்தோர் போல (புறம்.30:1-6)
என்னும்
அடிகளான் சூரியன் இயக்கமும் அச்சூரியனால் சூழப்பட்ட நிலமண்டிலமும் காற்றியங்கு திசையும்
பிடிப்பின்றி நிற்கின்ற ஆகாயமும் என்றிவை இயல்புகளை உணர்ந்து கூறும் அறிந்தோர் இருந்தனர்
என்ற கருத்து பெறப்படுகிறது. வானியல் கல்வி உடையோர் அக்காலகட்டத்தில் வாழ்ந்தமையை இப்பாடற்
கருத்து எடுத்துரைக்கிறது. இப்பாடலின்மூலம் சூரியவட்டம்,அதனியக்கம், வானவெளி மண்டலம்
குறித்த சுழலறிவு இருந்தமை பெறப்படுகிறது.
வெள்ளிக்கோள் மழைக்கோள் என்று கருதப்பட்டு அது
செல்லும் பாதையினைக் கொண்டு வறட்சி தோன்றுவதைச் சங்க இலக்கியப் பாடல்கள் உணர்த்துகின்றன.மேலும்,
வெள்ளித்
தென்புலத் துறைய விளைவயற்
பள்ளம்
வாடிய பயனில் காலை (புறம்.388)
என்ற பாடலடிகள்
வெள்ளி கோளானது தென்புலத்தில் உறைந்தமையால் நீரின்றி விளைவயல்கள் வாடிக் கிடக்கின்றன
என்னும் கருத்தைப் புலப்படுத்துகின்றன. வானில் நடைபெறும் நிகழ்வு ஒன்றினால் பூமியில்
நடைபெறும் மாற்றத்தை உணர்த்தவல்ல வானியல் கல்வி பெற்றவராகச் சங்கத்தமிழர் இருந்தனர்
என்பது புலப்படுகிறது.
மழை உருவாகும்
விதம், தெளிந்த குடிநீர் ஆகியன பற்றிய தெளிவான விளக்கங்கள் பழந்தமிழ் இலக்கியங்களில்
விரவிக் கிடக்கின்றன.
சூழல் தூய்மை
மனிதன் தான் வாழும் இருப்பிடத்தையும் சுற்றுப்புறத்தையும்
தூய்மையாகப் பேணுகின்றபோது ஆரோக்கியமான உலகிற்கு வழிகோலுகின்றான். அவ்வகையில் தம்மையும்
தாம் வாழ்ந்த சூழலையும் அக்கறையுடன் பண்டையோர் பேணியமை சங்க
இலக்கியங்களில்
காணப்படும் குறிப்புகளால் பெறப்படுகிறது.
உடலைப் பேணிக்காக்கும் உணவுப்பழக்கத்தினை மேற்கொண்டு
இருந்தனர். அவ்வுணவைப் பாதுகாத்து உண்டனர் என்பதைச் சங்க அக இலக்கியங்கள் எடுத்தியம்புகின்றன.
இன்றைய சூழ்நிலையில்
மக்கள் சைவ அசைவ உணவாகிய இரண்டையும் சேர்த்து உண்ணுவதே எல்லா விதமான சத்துப் பொருட்களும் உடலில் சேர்வதற்குரிய
நல்வழி. உணவு முறையைச் சைவம் அசைவம் எனப் பிரிப்பது அறிவியல் அடிப்படையற்ற செயல்(4)
என்று அறிஞர்
குறிப்பிடுவர். பழந்தமிழர் மேற்குறிப்பிட்டதை நன்குணர்ந்தவர்களாக விளங்கியுள்ளனர்.
பழந்தமிழர் உணவில் சைவ அசைவ உணவுகள் இரண்டும்
கலந்து இருந்துள்ளன. குறிப்பாக, உணவினை வேக வைத்து உண்ணும் வழக்கம் இருந்தமை அறிகின்றோம்.
குப்பைக்
கீரை கொய்க்கண் அகைத்த
முற்றா
இளந்தளிர் கொய்துகொண்டு உப்பின்று
நீருலை
அக ஏற்றி மோரின்று
அவிழ்பதம்
மறந்து பாசடகு மிசைந்து
மாசொடு
குறைந்த உடுக்கையள் (புறம்.159:9-13)
என்ற பாடலடிகளில்
வேக வைக்கப்பட்ட கீரை உணவாக உட்கொள்ளப்பட்டமை கூறப்படுகிறது. அக்கால மக்களின் தூய்மை
பற்றிய விழிப்புணர்வாக இதனைக் கருதயிடனுண்டு
.
உணவுப் பாதுகாப்பு
பருவ காலத்திற்கேற்ப உணவுகளைச் சேமிக்கும் பழக்கம்
நிரம்பப் பெற்றிருந்தனர். சிறிய தாழ்வாரத்தினை உடைய குடிசையில் வாழும் குறவர்கள் வளைந்த
முங்கினுள் மதுவை வைத்து உண்ட செய்தியினை உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்,
குறியிறைக்
குரம்பைக் குறவர் மாக்கள்
வாங்கமைப்
பழுனிய தேறன் மாந்தி (புறம்.129:1-2)
என்ற பாடலடிகளால்
எடுத்தியம்புகிறார். இதுபோன்று அவ்வவ் நிலமக்கள் இத்தகைய உணவுப் பாதுகாப்பு முறையை
அறிந்து இருந்தனர் என்பதை இலக்கியங்கள் வாயிலாக அறிகின்றோம்.
தனிமனிதத்
தூய்மை, மனயகத் தூய்மை மற்றும் மக்கள் ஒன்று கூடும் மன்றத் தூய்மை குறித்தும் பழந்தமிழரிடையே
போதுமான விழிப்புணர்வு இருந்தமை காண்கிறோம்.
சூழல் மாசுபாடு
எப்பொருள்
மாசுபாட்டிற்கு உட்படுகிறதோ அப்பொருள் மாசு எனப்படும். மனிதனுக்கும் பிற உயிரினங்களுக்கும்
தீமை விளைவிக்கக் கூடிய நச்சுக்களைச் சுற்றுச்சூழல் மாசு எனப்படும்.(5)
சுற்றுச்சூழல்
பாதிக்கப்படும் தன்மையின் அடிப்படையில் மாசு பாட்டை ஒன்பது வகையாகப் பிரிப்பர். அம்மாசு
அனைத்தும் பழந்தமிழகத்தில் நிகழ்தலுக்கு வாய்ப்பில்லை எனினும் சில மாசுபாடுகள் பற்றிய
குறிப்புகள் நமக்கு கிடைக்கின்றன.
காடுகள்
அழிப்பு
பாரி பறம்பு மலையைச் சிறப்பிக்க வந்த கபிலர்,
குறத்தி
மாட்டிய வறல்கடைக் கொள்ளி
ஆரம்
ஆதலின் அம்புகை அயலது
சாரல்
வேங்கை பூஞ்சினைத் தவழும் (புறம்.108:1-3)
என்று வரும்
பாடலடிகளால் சந்தன மரம் எரிக்கப்பட்டமையும் அதனால் எழுந்த புகை வேங்கை மரத்தில் படிதலையும்
குறிக்கின்றார். அன்றாடத் தேவைகளுக்கு அரிய வகை சந்தன மரங்கள் அழிக்கப்பட்ட நிலையினைக்
குறிப்பால் உணர்கின்றோம்.
மற்றொரு புறப்பாடலில், களிறே, எழுவந் தாங்கிய
கதவம் மலைந்து (புறம்.97:8) என்ற வரியால் கோட்டைக்கு அமைந்த பெருங்கதவுகளின் வலிமையை
உணர்த்தும் செய்தியினால் கதவுகள் செய்ய மரங்கள் அழிக்கப்பட்டமை பெறப்படுகிறது. இது
போன்று தேர்கள், வண்டிகள், அச்சுகள் போன்ற பல பொருட்கள் செய்வதற்கும் மரங்களே பழங்காலத்தில்
பயன்படுத்தப்பட்டன.
மக்களின்
வாகனப் பயன்பாட்டிற்குத் தேர்கள் அதிகமாகப் பயன்பாட்டில் இருந்த குறிப்பினை,
வைகல்
எண்தேர் செய்யும் தச்சன் (புறம்.87:3)
எனும் பாடலடி
தருகிறது.
கால்நடைகளுக்காக மரமழிவு
கால்நடைகளின்
உணவுக்காக மகளிர் இலைகளைக் கொய்து தருவதனை,
அருவி
மாறி அஞ்சுவரக் கருகிப்
பெருவறம் கூர்ந்த வேனிற் காலைப்
பசித்த
அயத்துப் பூவுடன் உதிரக்
கொய்து
கட்டு அழித்த வேங்கையின்
மெல்லிய
மகளிரும் இழை கழைந்தனரே (புறம்,225:12-16)
என்ற பாடலடிகள்
இயம்புகின்றன. வேனிற்காலத்தே புல்லின்றி நிலம் காணப்பட கால்நடைகளுக்கு வேங்கை மரத்தின்
இலைகளைத் தழைகளாக பயன்படுத்தப்பட்ட பாங்கு கூறப்படுகிறது.
போரும் மரமழிவும்
படையெடுத்துச் செல்லும் மன்னர்கள் பகைநாட்டின்
காவற் காட்டினையும் காவற்மரங்களையும் வெட்டி அழித்த செய்தியினைப் புறப்பாடல்களான புறநானூறும்
பதிற்றுப்பத்தும் பரக்கப் பேசுகின்றன.
சோழன் பெருநற்கிள்ளி தன் பகைநாட்டு அரண்மனைகளில்
வளர்க்கப்பட்ட மரங்களை விறகுகளாகப் பயன்படுத்தினான் என்பதை,
விளை
வயல் கவர் பூட்டி
மனை
மரம் விறகு ஆக (புறம்.16:4-5)
என்ற பாடலடிகளால்
அறிகின்றோம். பிறிதொரு பாடல், சோழன் கிள்ளி வளவன் சேர நாட்டு படையெடுப்பின்போது காவற்
மரங்களை முற்றிலும் அழித்த செய்தியினைக் கூறுகின்றது. இச்செய்தியினை,
நெடுங்கை
நவியம் பாய்தலின் நிலையழிந்து
வீகமழ்
நெடுஞ்சினை புலம்பக் காவுதோறும்
கடிமரம்
தடியும் ஒசை தன்னுள்
நெடுமதி
வரைப்பின் கடிமனை இயம்ப (புறம்.36:7-10)
என்ற பாடலடிகள்
தருகின்றன.
விலங்கினப் பலி
பண்டைக் காலத்தில் பாதுகாப்பு, பொழுதுபோக்கு,
வழிபாடு மற்றும் வணிகக் காரணங்களுக்காக உயிர்கள் அழிக்கப்பட்டன. வழிபாட்டிற்காக விலங்கினங்கள்
அழிந்த செய்தியினை,
வினைக்கு
வேண்டி நீபூண்ட
புலப்
புல்வாய்க் கலைப் பச்சை
சுவல்
பூண்ஞாண் மிசைப் பொலிய
மறங்
கடந்த அருங் கற்பின் (புறம்.166:10-13)
என்ற அடிகள்
மானின் தோலிற்காக உயிர்ப்பலிகள் நடந்தமையை விளக்குகிறது.
நீர் மாசுபாடு
போர் காரணமாக எதிரி நாட்டு மன்னனின் நீர்நிலைகள்
பாழ்படுத்தப்படுவது போர் நடைமுறைகளில் ஒன்றாகக் கருதப்பட்டு உள்ளது.
ஒளிறு
மருப்பின் களிறு அலர
காப்புடைய
கயம் படியினை (புறம்.15: 9-10)
என்றும்,
கடிதுறைநீர்க்
களிறு படீஇ (புறம்.76:6)
என்றும்,
களிறு
படிந்து உண்டெனக் கலங்கிய துறையும் (புறம்.23:2)
என்றும்
கூறப்படுவனவற்றால் எதிரிகளின் நீர்நிலைகள் யானைகள் கொண்டு மாசுபடுத்தப்பட்ட செய்தி
பெறப்படுகிறது.
காற்று மாசுபாடு
காற்று மாசுபாடானது,
வேண்டாத வாசனைகள் காற்றில் கலத்தல், வாயுக்களின் அளவு மாறுபடுமாறு குற்ப்பிட்ட சில
வாயுக்கள் மட்டும் அதிகரித்தல், அணுக்கள் மற்றும் தூசுக்கள் போன்றவை கலத்தல் என்னும்
மூவகையினால் ஏற்படுகிறது. புகையினால் ஏற்படும் மாசினை,
துகில்விரி
கடுப்ப நுடங்கித் தண்ணென
அகிலார்
நறும்புகை ஐதுசென்று அடங்கிய
கபில
நெடுநகர் (புறம்.337:9-11)
என்னும்
பாடலடிகளில், மக்கள் வாசனைக்காக அகில் கட்டைகளை எரித்து வீடுகளில் பரப்புவதும் தொடர்ச்சியான
இச்செயலால் வீடுகள் கரி படிந்து காணப்படும் செய்தி கூறப்படுகிறது.
அகிற்புகையின் அடர்த்தி அதிகமாகும்போது அப்புகை
ஒரு மலையை மறைக்கும் அளவிற்கு கரும்புகையாகக் காட்சியளித்ததை, ஆடுமழை மங்குலின் மறைக்கும் நாடு என்ற நற்றிணைப்
பாடல் கூறுவது ஒர்ந்தத்தக்கது. பகை நாடுகளைத் தீயிட்டுக் கொளுத்தும் நிலையினைப் புறநானூற்று பாடல்கள் மிகுதியாகத் தரினும் அதனைக்
கண்டிக்கும் நிலையினையும் அண்டர் நடுங்கல்லினார் பாடலில் காண்கிறோம்.
புகைபடு
கூரெரி பரப்பிப் பகைசெய்து
பண்பில்
ஆண்மை தருதல் ஒன்றோ (புறம். 344:5)
என்ற பாடலடி
புலவருக்கு இருந்த சூழலியல் குறித்த அக்கறையினைப் பதிவு செய்கிறது. இவ்வாறாக, இயற்கைச்
சூழல்கள் மற்றும் மனிதர்களால் ஏற்பட்ட சூழல் மாசுபாடுகள் பற்றிய சிந்தனையைப் புறநானூற்றுப்
பாடல்கள் தெரிவிக்கின்றன.
நிறைவுரை
செவ்வியல்
இலக்கியங்களில் ஒன்றான புறநானூற்றில் சூழலியல் தொடர்பானச் சிந்தனைகள் அமைந்து காணப்படுகின்றன.
உலக இயக்கம், ஞாயிறு மண்டலம் ஆகியன பற்றி அறிந்த வானவியல் சிந்தனையாளர்கள் இருந்தனர்
என்பது இந்நூல் தரும் செய்தியாகும்.
சுற்றுப்புறச்சூழல் தூய்மை மற்றும் உணவு பாதுகாப்புமுறை
குறித்த பார்வை பழந்தமிழரிடையே இருந்தமை கூறப்பெற்றுள்ளது. போரினால் ஏற்படும் அழிவினைக்
குறிப்பாகப் பகை மன்னர் நாடுகள், காவற்காடுகள், மற்றும் குளங்கள் மாசுபடுதலை விவரிக்கின்றது.
அடிக்குறிப்புகள்:-
1. லாப்தேவ்,ஐ.,
பகுத்தறிவின் கிரஹம், ப.19.
2. ஆ.சிவலிங்கனார்
(ப.ஆ.), தொல்காப்பியம், களவியல், நூ.19, ப.
3. மதுரைத்
தமிழ்ப் பேரகராதி, தொகுதி-1, ப-252.
4. சி.இரா.இளங்கோவன்உணவுமுறை:தேவை
ஒர் அறிவியல் முறை, இ.ப.த.ம கருத்தரங்க ஆய்வுக்
கோவை, தொகுதி-1, ப. 314,
5. சுற்றுச்சூழல்கல்வி,
ஈ.வெ.ரா. கல்லூரி வெளியிடு, ப-4
Comments